இந்த விநாடி நீங்கள் செய்யும் செயலே உங்கள் அடுத்த விநாடி வாழ்வு..
01. சக்திக்கு இரண்டு முனைகள் இருக்கிறது ஒன்று செக்ஸ்.. இன்னொன்று இறைவன்.. ஒன்று புதிர் மற்றயது புனிதம். எனவேதான் செக்ஸ்சில் இருந்து இறைவனுக்கு செல்வது சுலபம் என்று ஞானிகள் கூறுகிறார்கள்.
02. இறைவனை நமக்கு தெரியுமோ தெரியாதோ செக்ஸ்சை நமக்கு நன்றாகத் தெரியும். மனிதனிடமுள்ள மாபெரும் சக்தி எது என்றால் அது செக்ஸ்தான்.
03. செக்ஸ் புயலடிக்கும் கடலைப் போன்றது, அதில் மாட்டிக் கொள்வது அபாயமானது. அதிலிருந்து வெளி வருவதும் மிகவும் கடினம்.
04. எப்படி மின்சாரத்தால் பல்வேறு கருவிகளை இயக்குகிறோமோ அதுபோல செக்ஸ்சும் ஒரு மின்சாரம்தான். அதை ஒரு விசையாக வைத்து பல்வேறு பணிகளை செய்ய வேண்டும். மின்சாரத்தில் கை வைத்து மரணிக்கக் கூடாதல்லவா..?
05. செக்ஸ்சை காதலாக, அன்பாக, பக்தியாக, லட்சியமாக, கற்பனையாக எது வேண்டுமாகவும் மாற்றலாம். மாற்ற வேண்டும். அப்போதுதான் அது பயன்படும். அப்போதுதான் அது ஆக்க சக்தி இல்லையேல் அது அழிவு சக்தி.
06. ஒரு நல்ல திரைக்கதை இல்லாத… நல்ல பாடல் இல்லாத.. திரைப்படம் ஒன்று முத்தக்காட்சியால், அல்லது படுக்கையறை காட்சியால் வெற்றி பெறுகிறதே எப்படி..? அதுதான் செக்ஸ் தரும் பலம்.
07. செக்ஸ் நம்முடன் பிறந்த சக்தி அதை அப்படியே பாவிக்காமல் வேறொன்றாக மாற்றி வெற்றி பெற்றவர்கள் ஆயிரம். செக்ஸ் என்பதை வேறொன்றாக மாற்றாமல் வெற்றி என்பது சாத்தியமில்லை.
08. சிற்றின்பத்தில் மூழ்குவோர் சொற்ப நேரம் சிகரத்தில் இருக்கலாம் பின் பாதாளத்திற்கு வந்துவிடுவார்கள். இது ஒரு சாபச்சக்கரம், இதிலிருந்து மீள ஒரே வழி இதன் அபார சக்தியைப் புரிந்து கொள்வதுதான்.
09. செக்ஸ் உணர்வால் ஒரு பெண்ணின் உடலை மட்டும் பார்ப்பீர்களாக இருந்தால் சாபச்சக்கரத்தில் மாட்டிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
10. நாம் ஒரு பெரிய வேலையை தலையில் வைத்துக் கொண்டு அதை முடித்துவிட்டு போகலாம் என்று முடிவு செய்து, அதன்படி செயற்பட்டோமானால் செக்ஸ்சின் சக்தி முழுவதும் அந்த வேலைக்கு எரி பொருள் போல பயன்படும்.
11. செக்ஸ் உணர்வை தேக்கி வைப்பதால் அது குறையாது. அந்தச் சக்தி காலியாகிவிடாது. அதன் வேகம் குதிரைச் சக்தி போல அதிகமாகத்தான் இருக்கும். இதுவரை தோன்றிய எழுத்தாளர்களும், விஞ்ஞானிகளும், இசை மேதைகளும், ஓவியர்களும் செக்ஸ்சை மாற்றி சாதனையாக்கி வெற்றி பெற்றார்கள்.
ஏதோ நம்மால் முடிந்தது செக்ஸ்சை குழந்தையாக்கிறோம் என்று அலைந்து பின் பெற்ற குழந்தையை வளர்க்கத் தெரியாத மனிதர்களால் நிறைந்து அலையும் இந்த உலகத்தை பார்த்து செக்ஸ்சை நல்வழிப்படுத்த வேண்டும்.
12. ஒரு மனிதன் அரிய வெற்றி பெறுகிறான் என்றால் அதற்குக் காரணம் அவன் தன்னிடமுள்ள ஓர் அரிய சக்தியை பயன்படுத்துகிறான் என்பது பொருள். செக்ஸ் என்ற மாபெரும் சக்தியை அவன் வெறும் செக்ஸ் உணர்வுகளுக்காக மட்டும் பயன்படுத்தவில்லை என்பதை அறிய வேண்டும்.
13. மிருகங்களுக்கு செக்ஸ் என்ற சக்தியை வேறு பணிகளுக்கு பயன்படுத்தத் தெரியாது. அதனால்தான் அவைக்கு வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல வெற்றி தோல்விகளால் வாழ்வதால் செக்ஸ் என்னும் சக்தியை சரிவர பயன்படுத்த வேண்டும்.
14. எப்போதும் கண்களை பார்த்து பேசுங்கள் அப்போதுதான் நாம் சொல்வது மற்றவர்களுக்குள் இறங்கும். நாம் சொல்லும் போது அவர்கள் கண்களைத் தாழ்த்திக் கொண்டால் அவர்களுக்கு சொல்வதில் பயன் எதுவும் இல்லை.
15. ஒரு வேலையை செய்வதும் வேலைதான் அதை செய்யாமல் விடுவதும் வேலைதான். எனவே எடுத்த பணியை முடிப்பதே நல்லது.
16. சின்னச் சின்ன முடிவுகளை எடுத்தால் அவற்றை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். மேலும் அப்படி நினைத்ததை சரியாக செய்தோமா என்று தவறாமல் செக் பண்ண வேண்டும்.
17. ஒரு நாளைக்கு ஐந்து வேலைகளை செய்வதாக எழுதி வைக்கிறோம்.. அதை செய்யாவிட்டால் வாழ்ந்ததே வேஸ்ட் போன்ற மனோநிலை வரவேண்டும்.
18. நாம் நினைத்ததை செய்வோம் என்று அடுத்தவர் நம்ப முன்னரே தடாலடியாக முதலில் நாமே அதை நம்ப வேண்டும்.
19. நம்மால் முடியும் என்ற லிஸ்ட்டை அதிகப்படுத்தி செல்ல வேண்டும். இதை மட்டும் செய்து பாருங்கள் அப்போது தெரியும் இதில் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறதென்று.
20. ஒரு பயிற்சியை மூன்றரை மாதங்கள் தொடர்ந்து செய்தால் அது பழக்கமாகிவிடும் எப்படியென்று கேட்கக் கூடாது. செய்து பாருங்கள்.
21. ஒரு விடயம் பழக்கமான பின்னர்தான் அதற்குரிய விளைவுகளும் கிடைக்க ஆரம்பிக்கும்.
22. காதல் என்பது மனது முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டு ஒரு சின்ன விஷயத்தைக் கூட தாங்க முடியாது டென்சன் ஆக்குகிறது என்றால், வேறு வேலை எதையும் செய்ய முடியவில்லை என்றால், அந்தக் காதல் ஜெயிக்காது என்று அர்த்தம்.
23. நமது ஆசை எவ்வளவு பற்றி எரிந்தாலும் அவை நிறைவேற ஒரு கால அவகாசம் வேண்டும்.
24. ஒரு மனிதனுக்கு ஆசை வருகிறது என்றால் அதற்கான தகுதி இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.
25. மனிதன் ஆசைப்படாத எதுவுமே அவனுக்குக் கிடைக்காது.. ஆசைப்பட்டாலும் ஆசைப்படும் முறையில் ஆசைப்படாவிட்டால் அது கிடைக்காது. சில சமயங்களில் அந்த ஆசையே தவறாக அமைந்துவிடுவதும் உண்டு.
அலைகள் பழமொழிகள் தொடரும். 31.03.2018