நல்ல நூல்களில் படித்தவற்றின் தேர்வுகள்..
01. மனதை ஒருமைப்படுத்தி காரியமாற்றுவதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். நேர்மைக்கு முதலிடம் கொடுங்கள். மற்றவை எல்லாம் இதற்கு அடுத்தவையே.
02. நாம் தேர்ந்தெடுத்த ஓர் ஆசை மீது மனதை ஒருமைப்படுத்தி குவிக்க வேண்டும். அது நிஜமாக மாறுவதற்கான அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். அதுவரை மனதை அதிலிருந்து அகலவிடக்கூடாது.
03. மனதை குவித்து பணியாற்ற இரண்டு வழிகள் உள்ளன ஒன்று சுய கட்டளை மற்றையது நமது அன்றாட பழக்கவழக்கம்.
04. நாம் முதலில் ஒரு பழக்கத்தை சகித்துக் கொள்கிறோம். பிறகு அதன் மீது அனுதாபம் கொள்கிறோம். கடைசியில் அதை கட்டியணைத்துக் கொள்கிறோம்.
05. பழக்கம் ஒரு கயிறு போன்றது. தினம் தினம் அதை பின்னுவது நாமே.. ஒரு கட்டத்தில் அதை அறுக்க முடியாமல் அதற்குள் சிறைப்படுவதும் நாமே.
06. பழக்கம் நமது எண்ணம், விருப்பம், மனோநிலை போன்றவற்றுக்கு எதிராக நம்மை செலுத்துவது உண்மை.
07. பழக்கம் என்பது ஒரு மனப்பாதை. அதன் வழியாகவே நமது கோட்பாடுகள் பயணம் செய்கின்றன.
08. ஒவ்வொரு தடவை பழக்கம் என்ற நதியால் நடக்கும் போதும் அது ஆழமாகியபடியே செல்கிறது. அதுபோல அகலமாகியபடியும் செல்கிறது.
09. எப்போதுமே கரடு முரடான பாதையில் செல்ல நமக்கு விருப்பமிருக்காது, பழகிய ஒரு பாதையிலேயே செல்ல விரும்புவோம். அது போலவே நமது மனதும் பழகிய பாதையாலேயே செல்ல விரும்புகிறது. இதுதான் பலர் தவறு என்று தெரிந்தும், மாற முடியாமல் பிழையான பாதையிலேயே பயணிக்கக் காரணம்.
10. நதிகளும் நீரோடைகளும் தடையற்ற திசை நோக்கியே ஓடுகின்றன. இந்த இயற்கைவிதி அனைத்து அம்சங்களிலும் செயற்படுகிறது.
11. பழைய பாதைகளை துறந்து புதிய பாதைகளை உருவாக்கிக் கொள்வதுதான் விரும்பத்தக்க செயலாகும். புதிய பாதைகளை உருவாக்கி பயணம் செய்தால் பழைய பாதைகள் பயனற்றுப் போய்விடும்.
12. நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்று யோசித்துப் பார்த்து புதிய பாதையை தேர்ந்தெடுங்கள். புதிய பாதை ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும் என்பதையும் மறவாதீர்கள்.
13. புதிய பாதை அமைப்பதில் உங்கள் மனதை உறுதியாக ஒருமைப்படுத்துங்கள். பழைய பாதைகளை எல்லாம் சுத்தமாக மறந்துவிடுங்கள்.
14. புதிய பாதையில் முடிந்த போதெல்லாம் பயணம் செய்யுங்கள். அவ்வாறு பயணம் செய்வதற்கேற்ற வாய்ப்பை தேடி உருவாக்கிக் கொள்ளுங்கள்.
15. அடிக்கடி புதிய பாதையில் பயணம் செய்யும் போது அது வசதியானதாகவும் எளிதாக பயணம் செய்யக் கூடியதாகவும் மாறிவிடும்.
16. பழைய பாதைகளை உதறித்தள்ளும் ஒவ்வொரு தடவையும் நீங்கள் பலமுள்ள மனிதராக மாறுகிறீர்கள்.
17. ஒவ்வொரு முறை ஒதுக்கித்தள்ளும் போதும் அதிலிருந்து ஆதாயம் பெறுகிறீர்கள். அடுத்த முறை ஒதுக்கித்தள்ளும் போது அதை எளிதாக செய்துவிடலாம்.
18. சாமர்த்தியம் என்பது பயிற்சியினாலும் பழக்கத்தாலும் வருவதாகும். சரியான முறையில் செயற்பட்டால் அதை அடையலாம்.
19. சாமர்த்தியம் என்பது ஒரு திறமையல்ல திரும்பத் திரும்ப செய்வதால் உருவாகும் ஒரு பழக்கமாகும்.
20. புதிய பாதையை சரியாக உருவாக்கிவிட்டீர்கள் என்பதை உறுதி செய்யுங்கள். அதன் பிறகு சந்தேகமோ பயமோ இல்லாமல் அதில் முன்னேறிச் செல்லுங்கள்.
21. பழக்கம் காரணமாக தொடர்ந்து ஒரேவிதமாக செய்யப்படும் காரியம் நிரந்தரமான செயலாக மாறிவிடுகிறது. தானாகவோ சுய சிந்தனையிலோ அது பலப்படுகிறது. உதாரணமாக ஒரு பியானோ இசைக்கலைஞன் தனது மனது வேறு இடத்தில் இருந்தாலும் பழக்கம் காரணமாக இயல்பாக வாசிக்கிறார்.
22. ஏதாவது ஒரு திட்டமோ விருப்பமோ நிஜமாக மாற வேண்டும் என்றால், அதை மனதில் ஏற்று முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும். அது சம்மந்தமாக செய்யப்படும் காரியங்கள் நிரந்தரமான ஒரு பழக்கமாக மாறிவிட வேண்டும்.
23. நாம் நமது 14 வயதுக்கு முன் பெற்ற தனிப்பட்ட பயிற்சிகள், நமது மத நம்பிக்கைகள் இரண்டும் இந்த விடயத்தில் முக்கியம் பெறுகின்றன.
24. உங்களுடைய திட்டமிட்ட குறிக்கோளை அடைவதற்கு எந்த புறச்சூழல் வேண்டுமோ அதற்கான தெளிவான படத்தை வரைந்து கொள்ளுங்கள். அது நிஜமாக மாறும்வரை அதன் மீது மனதை ஒருமைப்படுத்துங்கள்.
25. நீங்கள் தினசரி செய்யும் செயற்பாடுகளுடன் தொடர்புள்ள சகாக்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதில் நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
அலைகள் 08.04.2018 ஞாயிறு
பழமொழிகள் தொடர்கிறது…