வடகொரிய அதிபரும் அமெரிக்க அதிபரும் எழுதியிருக்கும் வரலாற்று புகழ் பெற்ற ஒப்பந்தத்தில் என்னென்ன சரத்துக்கள் அடங்கியுள்ளன என்பது முக்கிய விடயமாகும்.
சுமார் இரண்டு பக்கங்கள் கொண்ட இந்த ஒப்பந்தம் சிறிது போல தெரிந்தாலும் உண்மையில் உலக அமைதிக்கு அது மிகப் பெரிய மருந்தாக இருக்கிறது.
இதில் நான்கு முக்கிய விடயங்கள் இரு தரப்பாலும் சம்பிரதாயபூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
இவையே அடுத்து நடைபெறப் போகும் பேச்சுக்களுக்கு அடிப்படையாகும். இது தரப்பும் இதை ஆதாரமாக வைத்து தமது காய்களை நகர்த்தி இறுதி வெற்றியைப் பெற வேண்டும் என்பது இலக்கு..
ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய விடயங்களும் வருமாறு..
01. அமெரிக்காவும் வட கொரியாவும் நட்புரிமையை வளர்ப்பதற்காக அனைத்து வழிகளிலும் முன்னேற வேண்டும். இரு தரப்பும் புதிய உறவை விருத்தி செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையாகும். இதன் பெறுபேறாக இரண்டு நாடுகளின் மக்களும் அமைதியாக வாழ்வதோடு தொடர்ந்து முன்னேறிச் செல்லவும் வேண்டும்.
02. அமெரிக்காவும் வடகொரியாவும் தமது பலத்தை இனிமேல் அழிவுப்பாதைக்கல்ல கொரிய குடாவின் அமைதிக்கான பாதையில் முன் செலுத்த வேண்டும்.
03. அமெரிக்காவும் வடகொரியாவும் 2018 ஏப்ரல் 27ம் திகதி எழுதப்பட்ட பான்முஞ்சம் என்ற பிரகடனத்தை செயற்படுத்த வேண்டும். அதன் பிரகாரம் வடகொரியா அணு ஆயுதங்கள் முற்றாக நீக்கப்பட்ட நாடாகும். கொரிய குடாவும் முற்று முழுதாக அணு ஆயுதம் இல்லாத பிராந்தியமாக மாறும்.
பான்முஞ்சம் பிரகடனம் என்றால் என்ன..? தென் கொரிய அதிபரும் வடகொரிய அதிபரும் இணைந்து வெளியிட்ட பிரகடனம் இதுவாகும்.
2018 ஏப்ரல் 27ம் திகதி எழுதப்பட்ட ஒப்பந்தமாகும்.
இந்தப் பிரகடனம் மூன்று விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
அ. இரண்டு தலைவர்களும் உலக அமைதிக்காக அதி உயர் மட்டத்தில் பேச்சுக்களை நடத்த வேண்டும்.
ஆ. இனி ஒருவருக்கு ஒருவர் எதிராக நடக்கும் போக்கை மாற்ற வேண்டும். 70 வருடங்களுக்கு முன் இடம் பெற்ற கொரிய போரின் வடுக்களை இனியும் மனதில் இருத்தாமல் புதிய பாதையில் பயணிக்க வேண்டும்.
இ. கொரிய குடாவில் உள்ள அனைத்து அணு குண்டு தயாரிப்பு முயற்சிகளும் முற்றாகக் கைவிடப்பட வேண்டும்.
என்ற மூன்று முக்கிய விடயங்கள் இதில் உள்ளன.
04. அமெரிக்காவும் வடகொரியாவும் தம்மிடமுள்ள போர் கைதிகளை பரிமாற வேண்டும். போரில் காணாமல் போனோர் கைதானோர் போன்ற பட்டியலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
பிரச்சனைகளை எப்படி முடிக்க முடியுமோ அந்த வழியில் துணிவுடன் முன்னேற்றும் நம்பிக்கையை இந்த ஒப்பந்தம் வழங்கியிருக்கிறது. பழைய கால ஒப்பந்தங்கள் போல அமெரிக்காவில் புதிய ஆட்சி வந்தாலும் நிராகரிக்க முடியாத ஒப்பந்தம் இதுவாகும்.
வரலாற்று புகழ் மிக்க இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிவிட்டது.
அலைகள் 12.06.2018 செவ்வாய்