ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம், படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரிலீஸ் வரை பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது.
அந்த எதிர்ப்புகளே படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற செய்தது. இந்த நிலையில் காலா தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ,அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், படம் வெளியான மூன்றே நாட்களில் , பல தியேட்டர்கள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன . சேலத்தின் மையப்பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றில், நேற்று படம் பார்க்க கிட்டத்தட்ட 30 ரசிகர்கள் மட்டுமே வந்துள்ளனர்.
படத்தை பார்த்துவிட்டு திரும்பிய ரசிகர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, சாதாரணமாக ரஜினி படங்களுக்கு 50 நாட்கள் வரை முன்பதிவிலே டிக்கெட் பெறுவது கடினம் ஆனால், தற்போது மூன்றே நாட்களில் இப்படி வெறிச்சோடி இருப்பதை நம்ப முடியவில்லை என்கின்றனர்.
இணையதளங்களிலும், திருட்டு விசிடிக்களிலும் படத்தை பார்ப்பது மற்றொரு பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.