காலா படம் ஓடிய ஐரோப்பிய நாடொன்றில் படம் தொடங்கும் வரை திரையரங்கு துணிச்சல் மிக்க நாலு பேருடனும், பகிஸ்கரிப்பு தெரியாத ஏகாந்தத்தில் இருந்தவர்களும் ஒரு சிலரும் காணப்பட்டனர்.
எழுத்து ஓட்டம் ஆரம்பித்ததும் சட்டென திரையரங்கு நிறைந்தது..
எங்கிருந்து வந்தார்கள்..
காருக்குள் மறைந்திருந்ததாகவும் யாராவது பகிஷ்கரிப்பில் திருப்பி அனுப்பப்பட்டால் ஓடுவதற்கு தயாராக இருந்ததாகவும் .. அசம்பாவிதம் இல்லாததால் வந்து குவிந்ததாகவும் ஒருவர் கூறியிருக்கிறார்.
மக்கள் ஆத்மார்த்தமாக மாற வேண்டும்..
அவர்களை திடீரென பகிஷ்கரிக்கும்படி கேட்டால் ஈழத் தமிழர்களின் படமென்றால் வீறாப்பாக பகிஷ்கரிப்பார்கள். போன் செய்து அண்ணே நான் போகவில்லை என்று போலி விசுவாசமும் காட்ட பலர் தயங்கமாட்டார்கள்.
ஆனால் அவர்களுடைய கனவு தலைவர்கள் படங்களுக்கு தடை வந்தால் என்ன செய்வது ஒளித்திருந்தாவது வரத்தான் செய்வார்கள்.
இதற்குள் இதே படத்தின் பாடலுக்கு நாளைக்கு இவர்களின் பிள்ளைகள் விழாக்களில் ஆடப்போகிறது. அப்போது விசிலடிக்கப்போகும் பல பெற்றோருக்கு இது காலா படப் பாடலா இல்லை விஜய்யின் வேலா படப்பாடலா என்பது தெரியாது.
அதே வேளை பா.ரஞ்சித்தின் புகழ்பாடி திரிகிறார்கள் இன்னம் சிலர்..
அது சரியா..?
ஒரு வயதான நடிகரை எப்படி இரண்டரை மணி நேரம் சோர்வின்றி திரையில் காட்டுவதென்ற போராட்டம்தான் பா.ரஞ்சித்தினுடையது. அதில் அவர் 50 வீதம் வென்றுள்ளார் என்பதை மறுக்க முடியாது.
மற்றப்படி நிலம் பற்றிய தனது கருத்தை சொல்லிவிட்டார் என்கிறார்கள் இன்னும் சிலர்.
வயதான நிலக்கிழார்களின் அநீதிக்கு துணை போகும் கையாட்கள் போலத்தான் வயதான நடிகருக்கு பா.ரஞ்சித் துணை போயுள்ளார்.
எப்படி நில உரிமை வயதான முதலைகளிடம் பறி போனதோ அதுபோலவே தமிழரின் திரையுரிமை கன்னட ரஜினியிடமும், மலையாள கமலிடமும் இன்னும் பல தெலுங்கு நிலக்கிழார்களிடமும் பறி போயிருக்கிறது.
நில உரிமையும் திரையுரிமையும் வேறு வேறல்ல.. இரண்டும் ஒன்றுதான்.
மேலும் தமிழக இளைஞர்களை காயடிக்கும் செயல் என்ற கோணத்தில் பா.ரஞ்சித் மற்றவர்களால் பார்க்கப்படவில்லை.
ரஜினியால் உண்மையாகவே நடிக்க முடியவில்லை அதை தடுக்கவும் முடியவில்லை அவர் தானாக தன்னை புரிய வேண்டும்.
காலா படத்தில் எல்லாம் இருக்கிறது..
ஆனால் ஜீவன் இல்லை..
செத்த பாம்பு என்று தெரிந்ததும் ரசிகர் ஓட்டம் பிடிப்பர் திரையரங்கு ஒரு வாரம் தாக்குப் பிடிக்காது.
லைக்கா நிறுவனம் 2.0 படத்திலும் இந்த அவலத்தை சந்திக்க கூடுதல் வாய்ப்புள்ளது.
ரஜினி படங்களை பகிஷ்கரிப்பதுதான் அதற்கு பெரிய விளம்பரம்..
இல்லாவிட்டால் தானாக படம் திரையை விட்டு ஓடிவிடும்.