கவிஞர் வைரமுத்து, ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார். தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றம் செய்கிறார்.
இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், மறைமலையடிகள், உ.வே.சாமிநாதய்யர், பாரதியார், பாரதிதாசன், கருணாநிதி, கண்ணதாசன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து வைரமுத்து கூறும்போது, ‘‘இந்தியாவின் உயர்ந்த இலக்கியப் பரிசு என்று கருதப்படும் ‘ஞானபீடம்’, இதுவரை தமிழுக்கு 2 முறைதான் வழங்கப்பட்டிருக்கிறது. அகிலனுக்குப் பிறகு ‘ஞானபீடம்’ பரிசு பெற்ற எழுத்தாளர் ஜெயகாந் தன் ஆவார். . ‘தமிழாற்றுப்படை’ வரிசையில் சேர்வதற்கு ஜெயகாந்தனுக்கு தகுதி உண்டு. விளிம்புநிலை மக்களின் வாழ்வை, வலியை ரத்தமும் சதையுமாய் உரித்த மொழியில் எழுதிக்காட்டிய உணர்ச்சிமிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன். ‘எமக்குத் தொழில் கவிதை’ என்று கூறியவர் பாரதி. ‘எனக்குத் தொழில் எழுத்து’ என்று வாழ்ந்தவர் ஜெயகாந்தன். அவரது எழுத்தின் பெருமையை புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்வதும் பழைய தலைமுறைக்கு புதுப்பித்துக் கொடுப்பதும் காலத்தின் தேவை’’ என்றார்.
சென்னை நாரத கான சபா வில் இன்று (13-ம் தேதி) மாலை 6 மணிக்கு ‘தமிழாற்றுப்படை’ வரிசையில் ஜெயகாந்தன் கட்டுரையை கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார். விழாவுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தலைமை தாங்குகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார்.
வெற்றித்தமிழர் பேரவை யைச் சேர்ந்த வி.பி.குமார், சேலம் தமிழ்ச்செல்வன், வெங்கடேஷ், ராஜசேகர், தமிழரசு, செல்லத்துரை, ராஜபாளையம் ராம கிருஷ்ணன், மாந்துறை ஜெய ராமன், காதர் மைதீன், சண்முகம், பானுமதி, கலைமதி ஆனந்த் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.