நடிகர் விஷால் ஆந்திரா சென்று விசாகப்பட்டினம் மாவட்டம் அச்சிதாபூரில் ஊனமுற்றோருக்கான பள்ளியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை திறந்து வைத்தார். பின்னர் அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை அளித்தது. இது அரசு எந்திரத்தின் தோல்வியையே காட்டுகிறது. உளவு துறையும் சரியாக செயல்படவில்லை. 144 தடை உத்தரவை நேர்த்தியாக கையாளவில்லை. இதனால்தான் மக்கள் பலியான துயர சம்பவம் நடந்துள்ளது.
விவசாயிகள் நலனை பாதுகாப்பது எல்லோருடைய கடமையாக இருக்கிறது. எனது படங்களுக்கு வசூலாகும் வருவாயில் ஒரு சதவீதத்தை விவசாயிகள் நலனுக்காக வழங்கப் போகிறேன். சினிமாவில் இருக்கும் காலம் வரை இந்த பணியை தொடர்ந்து செய்வேன். என்னுடைய இந்த எண்ணத்தை அமல்படுத்த தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளனர்.
டிக்கெட் வாங்கி தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ஒவ்வொருவருமே இந்த சேவையில் பங்கெடுத்தவர்கள் ஆவார்கள். மக்களுக்கு சேவை செய்பவர்கள்தான் உண்மையான அரசியல் தலைவர்கள் என்பது எனது கருத்து. நானும் நீண்ட காலமாக நற்பணிகளை செய்து வருகிறேன். சேவை செய்வதற்காக பதவியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பதவி இல்லாமலும் மக்களுக்கு உதவலாம்.” இவ்வாறு விஷால் பேசினார்.