அமெரிக்க அதிபரை சந்த்து பேசி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட வடகொரிய அதிபர் இப்போது மலர்ந்த முகத்துடன் நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பேச்சுக்களின் முடிவில் எழுதப்பட்ட நான்கு முக்கிய ஒப்பந்த சரத்துக்களும் ஒருபுறம் இருந்தாலும் அவரைப் பொறுத்தவரை இது ஒரு பிரச்சார வெற்றியே.
ஜப்பானையும், தென்கொரியாவையும், சீனாவையும் தனது பக்கத்தில் இருக்க அனுமதிக்காது அமெரிக்க அதிபருடன் நேருக்கு நேர் பேசி ஓர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வெளியேறியிருப்பதுதான் முக்கியமான சம்பவமாகும்.
வடகொரிய அதிபர் தன்னுடைய நாட்டை எவ்வளவு உயர்வாக நேசிக்கிறார் என்பது அவருடைய செயலாலும் உறுதியாலும் உலகத்தால் போற்றப்பட்டுள்ளது.
சுவிற்சலாந்து பல்கலைக்கழகத்தில் படித்த அவர் ஆங்கிலத்தை பேசினாலும் சர்வதேச மன்றில் தனது சொந்தப் பாசையை விட்டுக் கொடுக்காமல் சொந்த மொழியிலேயே பேசியது தமிழர்கள் அறிய வேண்டிய செய்தியாகும்.
இன்று உலகம் முழுவதும் அவரை அமெரிக்க அதிபருக்கு இணையான ஒரு தலைவராகப் பார்த்திருக்கிறது.
உலக சரித்திரத்தில் கடந்த எழுபது வருடங்களாக பொறி கக்கிய ஒரு சிக்கலை முடித்து வைத்தவர் என்ற புகழுடன் இந்த 35 வயது தலைவர் திரும்பியிருக்கிறார் என்றால் அது அவருக்கு பெரிய வெற்றியே என்று ஆசிய பிராந்திய ஆய்வாளர் பிலிப் கோக்கர் கூறுகிறார்.
ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறதென்ற கவலை அவருக்கு இல்லை சுதந்திரப் பறவையாக அவருடைய விமானம் சர்வதேச வான் வழியில் பறந்திருக்கிறது.
வட கொரியா முழுவதும் அவர் ஒரு வெற்றித் திருமகனாக வரவேற்கப்படப் போகிறார்.
கொரியக் குடாவின் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆரம்ப வெற்றி கிடைத்துள்ளது. ஆனால் மற்றைய விடயங்கள் இனித்தான் மெல்ல மெல்ல நகர வேண்டியிருக்கிறது.
தலைவர்கள் போனாலும் மற்றைய அணிகள் நாளையும் தொடர்ந்து பேச இருக்கின்றன.
அடுத்த வாரம் முக்கிய பேச்சுக்கள் நடைபெறவுள்ளன.
அலைகள் 12.06.2018 மதியம்