ஆந்திராவின் புதிய தலைநகரை கட்டமைக்க ரூ.2000 கோடி

ஆந்திராவின் தலைநகர் அமராவதியை கட்டமைப்பதற்கான நிதி திரட்டுவதற்காக வெளியிடப்பட்ட அமராவதி பத்திரம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, குண்டூரை மையமாக கொண்டு அமராவதி தலைநகரை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். தலைநகர் அமைக்க மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இதையடுத்து அமராவதி தலைநகருக்காக நிதி திரட்ட மும்பை பங்குசந்தையில் பங்கு பத்திரம் விற்பனை செய்ய ஆந்திர மாநில அரசு அதிரடி முடிவெடுத்தது. இதற்காக ஆந்திரத் தலைநகரப் பகுதி வளர்ச்சி ஆணையம் ஆண்டுக்கு 10 புள்ளி மூன்று இரண்டு விழுக்காடு வட்டிவிகிதத்துடன் கூடிய அமராவதி பத்திரம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பத்திரத்தை மும்பை பங்குச்சந்தையில் இன்று பட்டியலிடும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார் தலைநகர் கட்டமைப்பதற்கு நிதி அளிப்பவர்கள் பெயர்கள் அரசின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. புதிய தலைநகர் கட்டுமானத்தில் ஒவ்வொரு செங்கலிலும் ஆந்திர மக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இதுவரை 2 லட்சத்து 28 ஆயிரம் மக்கள் இதில் இணைந்துள்ளனர். விஜயவாடாவிலிருந்து 42 கி.மீ., துாரத்தில் ஆந்திராவின் மையப்பகுதியாக கருதப்படும் அமராவதியில் புதிய தலைநகர் கட்டடங்கள் அமைய உள்ளன.

ஆண்டு முழுவதும் தண்ணீர் சுமந்து செல்லும் கிருஷ்ணா நதி, அருகில் விஜயவாடா, குண்டூர் போன்ற நகரங்கள், விமானம், ரயில், சாலை போக்குவரத்து அம்சங்கள் என எல்லாவற்றையும் கருத்திற்கு கொண்டு இந்த இடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்துள்ளார். ஆந்திரா பிரதேஷ் கேபிடல் ரிஜியன் டெவலப்மென்ட் அதாரிட்டி என்ற அரசு அமைப்பு மூலம் ‘மக்கள் தலைநகரம்’ என்ற பெயரில் புதிய தலைநகரை உருவாக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக குண்டூர் மாவட்டத்தில் 24 வருவாய் கிராமங்களிலுள்ள 53 ஆயிரத்து 748 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய தலைநகருக்காக கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, ரூ.50 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment