தேசிய நல்லிணக்கத்தினையும் ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வொன்றினை காண்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தமைக்கா எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த செயலணிக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு – கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களான மனோ கணேசன், டி.எம்.சுவாமிநாதன், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கயந்த கருணாதிலக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் சிறியாணி விஜேவிக்கிரம, பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் கூட்டமைப்பின் எம்.பி.க்களான எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை.
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து அவர் விடுத்துள்ள அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு கிழக்கிலுள்ள 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 16 உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சார்ந்தவர்கள் எனவும், வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளமையினால் வடகிழக்கு மக்களினது ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும்.
மேலும் யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் வாழ்ந்த பயிர் செய்த நிலங்கள் இன்னமும் இராணுவத்தின் வசம் இருப்பதனை சம்பந்தன் ஜனாதிபதியிடும் எடுத்துக் கூறியுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்கள் வன பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்ற திணைக்களங்களின் செயற்பாடுகளால் பெரும் அசௌகரியங்களை நோக்குவதாகவும் தமிழ் மக்களுக்கு அவர்கள் வசமுள்ள காணிகளுக்கு பல தசாப்தங்களாக அனுமதிப்பத்திரம் இன்னும் வழங்கப்படாமலும் உள்ளது.
மேலும் 1980 ஆம் ஆண்டுகளில் மஹாவலி சட்டத்தின் கீழ் மஹாவலியிலிருந்து நீர் வருவதற்கு முன்னமே ஏற்படுத்தப்பட்ட L திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் அரசாங்க துறைகளில் வேலைவாய்ப்பு தொடர்பில் தமிழ் இளைஞர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது.
இந் நிலையில் தேசிய நல்லிணக்கத்தினையும் ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வொன்றினை காண்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என்றார்.