இந்தியாவில் பெரும்பாலான பெண் விவசாயிகளின் தற்கொலைகள் விவசாயத் தற்கொலையாக பதிவு செய்யப்படுவதில்லை, விவசாயத் தொழிலில் முழுமையாக பெண்கள் ஈடுபட்டாலும், அரசு ஆவணங்களில் விவசாயிகளாக அவர்கள் முன்னிறுத்தப்படுவதில்லை என பத்திரிக்கையாளர் சாய்நாத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் யுனைட் (தகவல் தொழில்நுட்ப பொறியலாளர்களின் சங்கம்) நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சாய்நாத், விவசாயத் தொழிலில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு இருந்தாலும், விவாசயத்தில் ஏற்படும் நஷ்டம், கடன் காரணமாக அவர்கள் இறந்தால், அவர்களின் இறப்பு பெண்களின் தற்கொலை என்ற தலைப்பில் பதிவாகின்றன என்றும் பல நேரங்களில் பெண்களின் பெயரில் நிலம் இல்லாததால், அவர்கள் விவசாயிகள் என்றே பதிவு செய்யப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.
80 சதவீதம் அவர்களே
“விவாசய வேலைகளில் சுமார் எண்பது சதவீத பணிகளைப் பெண்கள் மேற்கொள்கிறார்கள். நாற்று நடப்படுவதில் இருந்து பயிர்கள் விளைந்து, அறுவடை செய்வது வரை பெண்களின் உழைப்பு கணிசமானது. வீட்டு வேலைகளை செய்துவிட்டு, விவசாய வேலைகளை செய்யும் பெண்கள் பலரும் விவசாயிகள் என்று அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆண்கள் இடம்பெயர்ந்து வேலைதேடி நகரங்களுக்குச் சென்றுவிட்டால், முழு சுமையும் பெண்கள் சுமக்கவேண்டியுள்ளது,” என்று கூறினார்.
18 ஆண்டுகாலமாக விவசாயம் மற்றும் கிராமப்பொருளாதாரம் குறித்து எழுதிவரும் பத்திரிகையாளர் சாய்நாத் விவசாயிகளின் மரணங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருபவர்.