திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலினை வாழ்த்திய பொருளாளர் துரைமுருகன் பழைய நினைவுகளை அசைபோட்டார். 1968-ல் கருணாநிதி தலைவரானது முதல் தற்போதைய பிரச்சினைகள் வரை பேசினார்.
அவரது பேச்சு விபரம்:
“60-ம் ஆண்டுகளில் அரைக்கால் சட்டை, குட்டி பனியன் போட்டுக்கொண்டு நானும் முரசொலி செல்வமும் இருந்தபோது பயந்து பயந்து அந்தப்பக்கம் ஓடுவீர்கள். ஆனால் என் கண் முன்னால் வளர்ந்து, எனது தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி, என தலைக்குமேல் வளர்ந்து எனக்கு தலைவராகவும் ஆகிவிட்டீர்கள். மகிழ்ச்சி. எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சி.
1962-லிருந்து மேடை மேடையாகப் பேசி இன்னும் பேசிக்கொண்டிருக்கும் நான், இன்று பேச முடியவில்லை. பேச்சு வரவில்லை. மாபெரும் இயக்கமான திமுகவில் பொருளாளர் பதவிக்கு என்னை உயர்த்தி வைத்துள்ளீர்கள். நான் அந்தப் பதவிக்குரிய தகுதியை முயன்று பெற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக மிகப்பெரிய இயக்கம், இன்று மு.க.ஸ்டாலின் தலைவராகி இருக்கிறார். இதேபோன்று கருணாநிதி 50 ஆண்டுகளுக்கு முன்னாள் தலைவர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றபோது அவரோடு இருந்தவன் நான், அவரோடு பணியாற்றியவன்.
ஆனால், உங்கள் தந்தையார் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்து அந்தப் பதவியை ஏற்கவில்லை. சிலுவையைச் சுமந்துகொண்டு வந்து தலைவர் பதவி ஏற்றார். ஏராளமான பிரச்சனைகள், கட்சிக்குள்ளேயே, ஆனால் அவர் அனைத்தையும் கடந்தார்.
ஆனால் ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல், மனக்குறை இல்லாமல் ஒட்டுமொத்தமாக உங்களைத் தலைவராக்கியுள்ளார்களே, அமைதியாக நீங்கள் பதவி ஏற்றுள்ளீர்கள். நீங்கள் உங்கள் தந்தையை விட அதிர்ஷ்டம் மிக்கவர்.
50 ஆண்டுகால அரசியல் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியில் இருந்தவன், எத்தனையோ பொறுப்புகளை திமுகவில் ஏற்றிருக்கிறேன், மாணவர் அணி, முதன்மைச் செயலாளர், இன்று பொருளாளர். அதில் பேச்சாளன் என்பதில் தான் எனக்குப் பெருமை.
கட்சியில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. டாக்டர் நாயர் வெண்ணுடை வேந்தர் வரும் வரை ஒரு கட்டம், ஜஸ்டிஸ் கட்சி வந்தது ஒரு கட்டம், பெரியார் சுயமரியாதை இயக்கம் ஒரு கட்டம், திமுக ஒரு கட்டம், அதன்பின்னர் அண்ணா, கருணாநிதி அடுத்து திமுகவை வழி நடத்தும் மகத்தான பணி உங்களுக்கு வந்துள்ளது. நேற்றுவரை திமுக வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர் நீங்கள். திமுக கட்சியல்ல, அது ஒரு சமூக நீதி இயக்கம்.
69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் யாரோ வழக்கு போட்டபோது துடித்தெழுந்து கடிதம் எழுதியவர் நீங்கள். அப்போதே நினைத்தேன் நீங்கள் தான் இந்த இயக்கத்தை வழி நடத்தக்கூடியவர் என்று.
நான் கருணாநிதியோடு இருந்தவன் பழகியவன். அவர் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியும். திமுகவில் உழைத்து ஓரம் நிற்பவர்கள் ஒதுங்கி போய்விடக்கூடாது என்று வாழ்த்துப் பட்டியலில் பெயரை எழுதினீர்கள். சபாஷ்… கருணாநிதிபோல் இந்த இயக்கத்துக்காக உழைத்தவர்களை மதிக்கிறாய். சபாஷ் தம்பி.
இந்த இயக்கம் பெரிய ஆலமரம். அடையாறு ஆலமரம் என்று ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் சென்னையில் பீச், மியூசியம், அடையாறு ஆலமரம் தான் மக்களுக்கு பொழுதுபோக்கு. அந்த அடையாறு ஆலமரம் இன்றும் உள்ளது. 2004-ம் ஆண்டு சுனாமி நேரத்தில் அதன் அடிமரம் விழுந்துவிட்டது.
அடிமரம் விழுந்துவிட்டால் அனைத்தும் விழுந்திருக்க வேண்டும். ஆனால் விழவில்லை. காரணம் விழுதுகள் வளர்ந்து அடிமரம்போல் ஆகிவிட்டது. அதனால் மரம் விழவில்லை, அது இன்றும் நிற்கிறது. காரணம் அதன் விழுதுகள் வியாபித்து மண்ணில் புதைந்து உறுதியாக நிற்கிறது.
அதுபோன்று ஆலமரத்தின் அடிமரமான தலைவர் இன்று விழுந்து போனாலும் அதன் விழுது நீங்கள் அடிமரமாகத் தாங்குகிறீர்கள். உறுதியாக இந்தக் கட்சியும் அடையாறு ஆலமரம் போல் வியாபித்து நிற்கும்.
இந்தப் பொறுப்பை நான் எவ்வளவு பெரிதாக மதிக்கிறேன் தெரியுமா? கருணாநிதி, எம்ஜிஆர், அன்பழகன், ஏன் ஸ்டாலின்கூட இந்தப் பொறுப்பை வகித்திருந்தார்கள். நண்பர் ஆற்காடு வீராசாமியும் பொறுப்பு வகித்தார்.
1996-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது, தலைவர் கருணாநிதி எனக்கு பொதுப்பணித்துறை பொறுப்பை வழங்கினார். அப்போது அவர் என்னிடம் கூறுகையில் ‘‘அமைச்சராகப் பொறுப்பேற்றபோது அண்ணா எனக்கு பொதுப்பணித்துறை பொறுப்பை சென்டிமென்ட்டாகத் தந்தார். அதேபோன்று உனக்கும் பொதுப்பணித்துறை பொறுப்பைக் கொடுத்திருக்கிறேன’’ என்றார். ஆகவே எனக்கும் சென்டிமென்ட்டாக இந்தப் பொருளாளர் பொறுப்பை வழங்கி இருக்கிறீர்கள.”
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.