சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.323 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து ரெயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட ரெயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைந்தது. பின்னர் பணம் இருந்த பெட்டி மட்டும் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பெட்டியை திறந்து பார்த்தபோது, மேற்கூரையில் துவாரமிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது. இந்த கொள்ளை தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்காமல் இருந்த நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீட்டர் தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக நாசா அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சிபிசிஐடி வைத்த கோரிக்கையை ஏற்று நாசா படங்களை அனுப்பியது.
நாசா படங்களின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 11 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில் வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.