தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கான 30 கோடி அமெரிக்க டாலர் உதவி தொகையை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வருடம் ஆகஸ்டில் டிரம்ப் புதிய தெற்காசிய கொள்கையை வெளியிட்டார். தீவிரவாத குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படியும் கேட்டு கொண்டார்.
இந்த நிலையில், இந்த வருடம் ஜனவரியில் பாகிஸ்தான் நாட்டுக்கான பாதுகாப்பு உதவிக்கு வழங்க இருந்த 115 கோடி அமெரிக்க டாலர் உதவி தொகை ரத்து செய்யப்பட்டது.
இதற்கு ஆப்கானிஸ்தான் தலீபான் குழுக்கள் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் ஆகிய தீவிரவாத குழுக்களுக்கு புகலிடம் அளித்ததுடன் அவர்களுக்கு எதிராக எந்தவிட நடவடிக்கையையும் எடுக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது என காரணம் கூறப்பட்டது.
இதனால் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், தெற்காசிய கொள்கைக்கு ஆதரவாக தீர்வுக்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்காத நிலையில் 30 கோடி அமெரிக்க டாலர் உதவி தொகையை ரத்து செய்வது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த நிதியை மற்ற அவசரம் நிறைந்த முக்கிய விசயங்களுக்கு அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் என பென்டகன் தகவல் தெரிவிக்கின்றது.