இந்த மண் நாம் வாழ்ந்த மண்…
ரியூப்தமிழ் நிறுவனம் இலங்கையில் முதலாவது ஆண்டு கால்பதித்ததன் நிறைவாக இந்த அழகிய பத்திரிகை உங்கள் கைகளில் சிரிக்கிறது. அகலத்திறக்கும் உங்கள் கண்களின் பிரகாசத்தை இதன் ஏடுகளினூடாக பார்த்து மகிழ்கிறோம்.
இந்த மண் நாம் வாழ்ந்த மண்… தனது ஓலைகளில் அகரம் சொல்லித்தந்து அயல் தேசம் அனுப்பி வைத்தவை எமது பனைமரங்கள்..
அந்த ஓலைச்சுவடிக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்கள். ஒவ்வொரு பனை மரமும் நமக்கு தமிழ் சொல்லித்தந்த ஆசான்களாக நிற்கின்றன. இந்த மண்ணுக்கும் மண்தந்த மக்களுக்கும், மரங்களுக்கும், காற்றுக்கும், மழைக்கும், இரவுக்கும், பகலுக்கும் நாங்கள் பிள்ளைகள்.
உயிர் பிழைக்க எம் தாய் எம்மை வெளிநாடு அனுப்பினாலும் நாம் எமது தேசத்தை மறக்கவில்லை. அங்கு நம் தேசமக்களுக்காக உருவாக்கப்பட்டதே ரியூப்தமிழ் காணொளி இணையமும் அதன் சகோதர ஊடகங்களுமாகும்.
நாம் வெளிநாட்டின் புதுமைகளில் எம்மை இழந்துவிடவில்லை. எல்லாப் புதுமைகளிலும் நாம் பிறந்த மண்ணையே கண்டோம். ஐரோப்பிய நாடொன்றில் பதியம் போட்ட ரியூப்தமிழை என்றாவது தாயகம் கொண்டு வந்து அங்குள்ள இளையோர் கைகளில் கொடுத்து புதுவழி காட்ட வேண்டும் என்ற கனவுகளுடனேயே அதை அல்லும் பகலும் நீரூற்றி வளர்த்தும் வந்தோம்.
அந்த வழியில் சென்ற ஆண்டு ரியூப்தமிழ் காணொளி இணையத்தின் பத்தாண்டு நிறைவுதினம் வந்தபோது அதை தாயகத்திலும் அமைக்க வேண்டிய காலம் கனிந்து வந்தது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி யாழ்ப்பாணம் 712 நாவலர் வீதியில் எமது காரியாலயத்:தை முறைப்படி திறந்து வைத்தோம்.
அன்றைய தினம் டென்மார்க் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரோல்ஸ் ராவன், யாழ்ப்பாணம் இந்திய உதவி தூதுவர் திரு. ஆ. நடராஜன், மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ரியூப்தமிழ் அதிபர் சு. ரவிசங்கர், திரைப்பட நடிகர் வஸந்த் செல்லத்துரை, முதல் தமிழ் பெண் விமானி அர்ச்சனா, கலை இலக்கியவாதி டென்மார்க் தர்மா தர்மகுலசிங்கம், தமிழகத்தில் இருந்து ராமநாதன் பாண்டியர், தொழில் அதிபர் கமலநாதன், காலம் சென்ற தோழர் செல்வா பாண்டியர் உட்பட பலர் பங்கேற்றிருந்தார்கள்.
அத்தருணம் இலங்கை டென்மார்க் நல்லுறவை வளர்க்க டேனிஸ் மகாராணியாரின் உருவப்படமும் நமது காரியாலயத்தில் டேனிஸ் பாராளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது.
அன்று போட்ட விதை இன்று ஆலமரம் போல வளர்ந்து நிற்கிறது. நமக்கான வானொலி, பத்திரிகை, விளம்பர சஞ்சிகை, உதைபந்தாட்ட அணி, தொழில்கள், புத்தக வெளியீடு என்று பல கோணங்களில் நாம் தாயகத்தில் காலூன்ற ஆரம்பித்தோம்.
இத்தனை பணிகளையும் நாமே செய்யவில்லை. தாயகத்தில் உள்ள இளையோரின் கரங்களில் ஒப்படைத்து அவர்களை புதிய பாதையில் வெற்றி நடை பயில துணையாக நிற்கிறோம்.
இன்று எமது ரியூப்தமிழ் வானொலி யாழ் மண்ணில் இருந்து உலகம் முழுவதும் கேட்கும் குரலாகவும், யாழ்ப்பாணத்தின் இதய நாதமாகவும் உலக மன்றில் 24 மணி நேரமும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எமது இலவச பத்திரிகைகள், விளம்பர சஞ்சிகைளும் கடந்த ஓராண்டு காலமாக மக்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளதாக உணர்கிறோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் உதைபந்தாட்ட லீக் போட்டிகள் இப்போது யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையின் சுதந்திரத்திற்கு பிற்பட்ட வரலாற்றில் முதல் முறையாக தொழில் முறை உதைபந்தாட்டத்தை ஆரம்பிக்கவும் விதைபோட்டது ரியூப் தமிழே என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களின் ஆர்வத்திற்கு சரியான பாதை அமைக்க உருவான எண்ணமே இதுவாகும்.
இதன் முன்னோடி நடவடிக்கையாக அக்கினிச் சிறகுகளுடன் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு ரியூப்தமிழ் நிறுவனம் ஆதரவு வழங்கி தாய் மண்ணில் வாழும் தமிழ் மக்களின் விளையாட்டுத் துறையை உற்சாகப்படுத்தியது. அதில் இருந்து ஊற்றெடுத்ததே என்.ஈ.பி.எல் என்ற வடக்கு கிழக்கு இணைந்த உதைபந்தாட்டப் போட்டியாகும்.
இதுதவிர தாயகத்தில் சினிமாவை வளர்க்க எம்மால் தயாரிக்கப்பட்ட உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தை யாழ் ராஜா திரையரங்கில் தொடர்ந்து மூன்று தினங்கள் இலவச காட்சிகளாக காண்பித்தோம். மேலும் திரைப்பட வளர்ச்சிக்கும் கரம் கொடுத்தோம். தாயக இளைஞர்களை நடிக்க வைக்கும் புதிய திரைப்படத்தையும் எமது நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இதற்காகவே இலங்கை சினிமா 2020 ம் ஆண்டு இலக்கு என்ற புதிய வேலைத்திட்டத்தை எமது நிறுவனம் புத்தக வடிவில் எழுதியிருக்கிறது. அதை செயற்படுத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விரைவில் நமக்கான வர்த்தக சினிமாவும், கலைத்துவ சினிமாவும் இரு பெரும் நதிகளாக பெருக்கெடுத்து ஓட இருக்கிறது.
அதுபோல மாதம் ஒரு புத்தகத்தை வெளியிடும் புதிய முயற்சியும் இம்மாதம் ஆரம்பிக்கிறது. உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற எமது புதிய வாழ்க்கை வரலாற்று தன்னம்பிக்கை நூல் வெளியாக இருக்கிறது. கோயில் கட்டி கும்பிடப்படும் ஆர்ஜண்டீனா வீரன் மரடோனா முதல் கிறிஸ்டியானோ றொனால்டோ வரை உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட லெஜண்ட்களின் வாழ்க்கை வரலாறு நூல் வடிவில் வெளிவருகிறது. டென்மார்க்கில் இருந்து புகழ் பெற்ற எழுத்தாளர் கி.செ.துரை இந்த நூலை எழுதியிருக்கிறார்.
துவண்டு போன மக்களை தன்னம்பிக்கை பெறச் செய்ய இந்தப் படைப்புக்கள் தொடர்ந்து வெளிவரவுள்ளன. இலங்கை, இந்திய நாடுகளில் வெளிவராத பல சிறந்த மேலைத்தேய படைப்புக்கள் நமது தமிழில், நமது தமிழ் சிந்தனையில் புதியதோர் எழுத்து வடிவமாக அறிமுகமாக இருக்கின்றன.
பாடசாலைகள், விளையாட்டுக்கழகங்கள், நூல்நிலையங்கள் உட்பட சகல இடங்களுக்கும் எமது புத்தகச் சந்தை விரிவடைய இருக்கிறது. நல்ல தரமான காத்திரமான, சமுதாய மேம்பாட்டுக்கு தேவையான படைப்புக்கள் வரவுள்ளன.
போருக்கு பிந்திய உலக மக்களை தன்னம்பிக்கையால் மீட்ட புது மாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற எமது நூலும் வெளிவர இருக்கிறது.
இதுதவிர நன்னீர் மீன் வளர்ப்பு, போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கல், வேலைவாய்ப்புக்களை உருவாக்கல் என்று பெரும் முதலீட்டில் எமது பணிகளை விஸ்த்தரித்துள்ளோம்.
போருக்கு பிந்திய வாழ்க்கையே உலகில் அதிக சவால்களை சந்திக்கும் வாழ்வாகும். இரண்டாவது உலக மகா யுத்தத்தினால் அழிந்து போன நாடுகளுக்கு ஐ.நாவின் தலைமையில் புதிய உதவி வழங்கும் திட்டம் ஒன்றை உருவாக்கி ஐரோப்பிய மக்களின் சமுதாய வாழ்வை காப்பாற்றினார்கள்.
அதுபோல ஒரு பாரிய உதவி நமது மக்களை வந்தடையவில்லை. அந்தப் பொறுப்பு இன்று புலம் பெயர் தமிழ் மக்களிடமே இருக்கிறது. அதை உணர்ந்து அமைதியும், ஆரோக்கிய வாழ்வும், வளரும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்வும் தர இலங்கையின் சட்ட மரபுகளுக்கு உட்பட்டு நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
நமது மக்கள் முகங்களில் சிரிப்பை காண வேண்டும்..
நமது இயற்கை மறுபடியும் மக்களோடு இணைந்து சிரிக்க வேண்டும்..
சோளகமும், வாடையும், கொண்டலும், கச்சானும், பாடும் பறவைகளும், பக்கத்து வீட்டு குடும்பங்களும் அன்பும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வை காண வேண்டும்.
வன்முறையற்ற, இதயமுள்ள, பாசமும் நேசமும் கொண்ட அன்பான எமது பெறுமதி மிக்க பழமையும் பெருமையும் மிக்க வாழ்க்கை விழுமியங்களை மீட்டாக வேண்டும்.
இப்படி ஏராளம் கடமைகளுடனும், கனவுகளுடனும் கால் பதித்துள்ளோம். இதற்கு நாம் மட்டும் போதுமா இல்லை முதலில் உங்கள் ஆதரவு வேண்டும். இந்த மகிழ்வான ஓராண்டு வெற்றித் தருணத்தில் மேலும் பல உன்னதமான திட்டங்களை உள்ளக்கமலத்தில் இருத்தி உங்களை நோக்கி எமது அன்பான கரங்களை அகல விரித்துள்ளோம்.
இந்தத் தேசத்தில் இனி..
கதலி வாழைகள் மனமகிழ்ந்து கனிகளை மடியில் கொட்டும்..
அது கண்டு ஏழைப் புலவனின் கண்களில் புத்தொளி பிறக்கும்..
நாளைய தலைமுறைக்கு வளமான எதிர்காலம் தெரியும்..
அன்புத்தாயின் முகத்தில் மறுபடியும் புன்சிரிப்பு பூக்கும்..
முற்றத்து மல்லிகையும் முருங்கையும் முகமலர்ந்து சிரிக்கும்..
காலங்களில் என்றும் வசந்தமாக எமது வாழ்வு மாறும்..
அந்த வெற்றி நோக்கி நடப்போம்.. இனி..
ரியூப்தமிழ் உங்களுக்கு நீங்கள் ரியூப் தமிழுக்கு..
கரங்களை பற்றிக் கொள்ளுங்கள்..
ஒளிமயமான எதிர்காலம் நோக்கி வீறு நடை பயில்வோம்..
ரியூப்தமிழ் ஆசிரியர் பீடம்.