அதர்வாவுக்கு உண்மையான முதல் வெற்றி என ‘இமைக்கா நொடிகள்’ படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘இமைக்கா நொடிகள்’. பிரதான பாத்திரத்தில் நயன்தாரா நடித்த இந்தப் படத்தில், அவருடைய கணவராக சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் கஷ்யப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் குறித்து ட்வீட் செய்துள்ள இயக்குநர் சுசீந்திரன், “தன் முதல் படமான ‘டிமான்டி காலனி’ திரைப்படத்தில் சின்ன கதைக்களத்தைக் கொண்டு பிரமாதமான திரைக்கதை மூலம் நம் எல்லாரையும் பிரமாதப்படுத்தியவர் அஜய் ஞானமுத்து.
இத்திரைப்படத்திலும் வலுவான திரைக்கதை மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். காதல் காட்சிகள் மட்டும் அதிகப்படியான நீளம். அனுராக், நயன்தாரா, நயன்தாராவின் மகள் என படத்தில் நடித்த அனைவருமே நேர்த்தியான நடிப்பு.
சிறிது நேரமே வந்தாலும், கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் நடிப்பு விஜய் சேதுபதி… சேது வாழ்த்துகள். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு, ஆதியின் பின்னணி இசை மிகப்பெரிய பலம்.
உண்மையான முதல் வெற்றி அதர்வாவுக்கு. ஈட்டியின் வெற்றி – இமைக்கா நொடிகள் வெற்றி… அதர்வாவின் கடின உழைப்புக்கு, சினிமா அவரைக் கைவிடவில்லை. வாழ்த்துகள் பிரதர். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். புதிய சினிமா ரசிகர்கள் திரையரங்கம் சென்று பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.