தன் வேலையைச் செய்யாது பிறர் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காகத் தான் தமிழக பாஜக தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டாரா என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான். பிறப்பை வைத்து மனிதரை மேல் கீழ் எனப் பார்ப்பது பாவம்; செயலை வைத்து மனிதரை சீர்தூக்கிப் பார் என்கிறார் திருவள்ளுவர். இதில் திருவள்ளுவர் குற்றம் என எதைக் குறிப்பிடுகிறாரோ அதுதான் பாஜகவின் அடிப்படைக் கொள்கை. இக்குற்றம் மற்ற அனைத்துக் குற்றங்களுக்கும் தோற்றுவாயாக இருக்கிறது என்பதுதான் இக்குறள்வழி திருவள்ளுவர் நமக்கு உணர்த்துவது.
அப்படியிருக்கும்போது அக்கட்சிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர் எப்படிச் சிறப்புடை செயல்கள் செய்வார்? அதற்காக, நமக்கு வாய்த்தது இவ்வளவுதான் என்று நாம் வாளாவிருக்க முடியாது; தீமைகளைக் களைந்தாக வேண்டும்; திருவள்ளுவர் வழி தமிழினம் அணி சேர்ந்தாக வேண்டும்.
தன் வேலையைச் செய்யாது பிறர் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து அவர் மீது பாயும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பாசிசப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட சோபியா, பாஜக தலைவர் தமிழிசையின் நிர்பந்தத்தால் கைது செய்யப்பட்டார். சோபியா குடும்பத்திற்கு தமிழிசையின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகளும் பாஜகவின் கொள்கை, கோட்பாடு மற்றும் செயல்திட்டம்தானா? இதற்காகத்தான் பாஜக தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டிருக்கிறாரா?
இந்த கேள்விகளை எழுப்பும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதற்கான விடையை எதிர்பார்க்கிறது.
தமிழிசையின் நிர்பந்தத்தால் கைது செய்யப்பட்ட சோபியாவை உடனடியாக விடுவிப்பதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தாருக்குமான பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.