சர்ச்சைகளை ஏற்படுத்திய மலையாள நாவலான ‘மீஷா’வைத் தடை செய்ய மறுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழுத்தாளர்களின் கற்பனைக்குத் தடை விதிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
மலையாள பத்திரிகையான மாத்ருபூமியில் எஸ். ஹரீஷ் என்பவர் எழுதிய ‘மீஷா’ நாவலின் அத்தியாயங்கள் வெளியாகின. அவை இந்து அர்ச்சகர்கள் மற்றும் பெண்கள் குறித்துத் தவறாக சித்தரிப்பதாகக் கூறிப் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் ‘மீஷா’ நாவலின் சில பகுதிகளைத் தடை செய்ய வேண்டும் என்று டெல்லியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தன்னுடைய மனுவில், ”புத்தகத்தில் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல், பெண்களைப் பாலியல் பொருட்களாகச் சித்தரிக்கிறது. இது குழு வன்முறையைத் தூண்டிவிடக் கூடும். எனவே அவை தடை செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவற்றுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மறுத்துள்ளது.
எழுத்தாளர்களின் சுதந்திரமான கற்பனையைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் இலக்கியப் படைப்புகளைத் தடை செய்ய இயலாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த நீதிபதி சந்திரசூட், ”இதுமாதிரியான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். இணையக் காலகட்டத்தில், இதை ஒரு பிரச்சினையாக மாற்றுகிறீர்கள். இதை மறந்துவிட்டால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.