பம்பாய் படத்தில் வரும் ‘உயிரே உயிரே’ பாடல் குறித்து உருகிப் பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்றது. அந்த விழாவில் மேடையேறிய வைரமுத்து, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் மூவரிடமும், ‘உங்கள் கூட்டணியில் உருவான பாடல்களில், எந்தப் பாடல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?’ என்று கேட்டார் பின்னணிப் பாடகர் கார்த்திக்.
முதலாவதாகப் பேசிய வைரமுத்து, “எனக்கு ‘பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’. கலைக்கு கொடுக்கிற மிக முக்கியமான மூலதனம் நேரம். மாலை 6.30 மணிக்கு 30 நிமிடத்துக்குள் கோடம்பாக்கத்தை அடைய வேண்டும். ஆனால், அது சாத்தியப்படாது. அப்படி வேகமாகப் புறப்படுகிற நேரத்தில் கூட ‘உயிரே’ பாடல் வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ கேட்டால், இப்போதுகூட நின்றுவிடுவேன்.
என்னுடைய பாடல்களில் மிக அழகாகப் படமாக்கப்பட்ட பாடல் என்றால், நான் மூன்றைச் சொல்லுவேன். ஒன்று, பாரதிராஜா இயக்கத்தில் ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’. இரண்டாவது, பாலச்சந்தர் இயக்கத்தில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’. மூன்றாவது, மணிரத்னத்தின் ‘உயிரே உயிரே’.
அந்தப் பாட்டு என்னுடைய கனவு. ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனுக்கு என்னுடைய பாராட்டுகள். மழை பெய்த ஈரத்தில், அந்த சுவர்களில் பாசி படிந்திருக்கும். அரவிந்த் சாமிக்கும், மனிஷா கொய்ராலாவுக்கும் இடையில் உள்ள பாசத்தை, இந்த சுவரிலுமா நீங்கள் காட்டுவது என்று நினைத்துக் கொண்டேன். இவர்களின் பாசம் சுவரிலும் படிந்திருக்கிறது.
தமிழ்க் கலையை முழுக்கத் துய்க்கக்கூடிய கலாச்சாரம் தமிழ்நாட்டில் இல்லை. நல்ல இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தமிழ் இவைகளை உள்வாங்கி, நிதானமாக அசைபோட்டு ரசிக்கக்கூடிய ஒரு கலாச்சாரம் வந்ததென்றால், கலை இன்னும் மேம்படும். அப்படிப் பார்க்க வேண்டிய பாடல்களில் ஒன்று ‘உயிரே உயிரே’” என உருகிப் பேசினார் வைரமுத்து.