ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 பேரின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்நிலையில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன்சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கையும் சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால், ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய, சட்டப்பிரிவு, 435-ன் கீழ் மத்திய அரசின் அனுமதி அவசியமாகும் என்பதுதான் மத்திய அரசின் வாதமாக இருந்து வந்தது. ஆனால், மாநில அரசு இந்த சட்ட விதியின்கீழ், ஏழு பேரையும் விடுதலை செய்ய கேட்டுக் கொண்டுகூட, அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
எனவே, இப்போது, அந்த சட்டப்பிரிவை கொண்டுதான் விடுதலை செய்தாக வேண்டும் என்ற கட்டாயம், இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பு மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, 161-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில அரசால் தமக்குள்ள அதிகாரத்தின் கீழ் 7 தமிழரையும் விடுதலை செய்வதாக அதிரடியாக அறிவிக்க முடியும்.
இதற்காக தமிழக அமைச்சரவை கூட்டப்பட வேண்டும். அமைச்சரவையில், 7 தமிழர் விடுதலை தொடர்பாக வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். பின்னர், அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆளுநர் இதில் இறுதி முடிவை எடுப்பார்.
முன்னதாக, தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, 7 பேர் சார்பிலும், புதிதாக ஒரு மனு, தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டும். அந்த கோரிக்கையை அடிப்படையாக கொண்டுதான் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கான பணிகளை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நகல் கிடைத்ததும், 7 பேரின் வழக்கறிஞர்களும் ஆரம்பிக்க உள்ளனர்.