ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தின்போது, 1861இல் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உடலுறவு கொள்ளும் ஒருபாலுறவு குற்றமாக்கப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஒருபாலுறவைக் குற்றமாக்குவதை நீக்கி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து முக்கியத் தகவல்களின் தொகுப்பு இதோ.
சமூகத்தில் மாற்றம் உண்டாகும்போது, சட்டங்களிலும் மாற்றம் உண்டாக வேண்டும். 158 ஆண்டுகால பழமையான சட்டம் என்பதால் அது தொடர்ந்து நீடிக்க வேண்டிய கட்டாயமில்லை.
ஒரு ஆண் இன்னொரு ஆணையும், ஒரு பெண் இன்னொரு பெண்ணையும் தன் துணையாக தேர்வு செய்வது அவர்களின் அடிப்படை உரிமை. அதில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை.
எதிர் பாலினத்தவரை தன் துணையாகத் தேர்வு செய்பவர்களுக்கும் ஒரே பாலினத்தவரைத் தேர்வு செய்பவர்களுக்கும் இடையே எவ்விதமான பாகுபாடும் காட்டக்கூடாது.
சமூகத்தின் பார்வையில் ஒருபாலுறவு தவறாக இருந்தாலும் அரசியல்சாசனத்தின் அடிப்படையில் இது தவறில்லை. ஒரு சமுதாயம் முன்னேறும்போது, அதன் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் நோக்கம்.
சுயவிருப்பதின் அடிப்படையில் இல்லாமல், வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றாலும், குழந்தைகளிடமும் ஒருபாலுறவு வைத்துக்கொண்டால் அது பிரிவு 377இன் கீழ் குற்றமாகவே கருதப்படும். அதேபோல விலங்குகளிடம் பாலுறவு கொள்வதும் குற்றமாகவே நீடிக்கும்.