பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலடைக்கப்படடுள்ளனர். தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக அரசைப் பொறுத்தவரை இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. கருணை அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் அதனை மத்திய அரசு நிராகரித்து விட்டது. தமிழக அரசின் கோரிக்கை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் நிராகரித்தார்.
குடியரசு தலைவரின் நிராகரிப்பை எதிர்த்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேசமயம் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அத்துடன் மத்திய அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது.
இக்குறிப்பிட்ட வழக்கில் 7 பேரும் 27 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர். இப்பின்னணியில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட அடிப்படையில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி இவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை வழங்க வேண்டுமெனவும், இப்பரிந்துரையினை ஏற்று தமிழக ஆளுநர் உடனடியாக இவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது. இப்பிரச்சினையில் காலதாமதமின்றி உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்” என பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.