தொண்டர்களுக்காக பெண்களைக் கடத்துவேன் என்று பேசிய பாஜக எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை அறுத்துக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தரப்படும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுபோத் சாவோஜி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராகத் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளார். காட்கோபர் தொகுதி பாஜக எம்எல்ஏ ராம் கதம். சமீபத்தில் ஜென்மாஷ்டமி அன்று மும்பையில் உரியடித்தல் போட்டி நடத்தப்பட்டது.
அந்தப் போட்டியின் போது பாஜக தொண்டர்கள் மத்தியில் எம்எல்ஏ ராம்கதம் பேசுகையில்,” நீங்கள் எந்தப் பெண்ணை காதலித்தாலும் என்னிடம் வந்து சொல்லுங்கள் அந்த பெண் யாராக இருந்தாலும் அவரைக் கடத்திவந்து உங்களிடம் தருகிறேன். என்னுடைய செல்போன் எண்ணைக் குறித்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.
பாஜக எம்எல்ஏ ராம் கதம் பேசிய வீடியோவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஜிதேந்திர அவாத் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். பாஜக எம்எல்ஏ ராம் கதமின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்திருந்தன. மகளிர் அமைப்புகளும் ராம் கதமை கண்டித்திருந்தன. பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய ராம் கதமையும் நெட்டிசன்கள் விளாசி இருந்தனர்.
மன்னிப்பு
இதற்கிடையே தன்னுடைய பேச்சு குறித்து பாஜக எம்எல்ஏ ராம் கதம் ட்விட்டரில் நேற்றுமுன்தினம் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், ‘‘நான் யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணத்துடன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அவ்வாறு நான் கருத்து தெரிவித்திருந்தால், அதற்கு மன்னிப்புகோருகிறேன். என்னுடைய கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம்’’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மும்மைபில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுபோத் சாவோஜி நிருபர்களுக்கு இது குறித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ” பொறுப்பான பதவியில், மக்கள் பிரதிநிதியாக இருக்கும் பாஜக எம்எல்ஏ ராம் கதம் தனது தகுதிக்கு குறைவான முறையில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவரின் பேச்சால் இப்போது அவர்தான் அவமானப்பட்டுள்ளார்.
என்னுடைய வேண்டுகோள் இப்போது என்னவென்றால், மகாராஷ்டிராவில் மண்ணில் பிறந்த யாராவது ஒருவர், பாஜக எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை அறுத்துக் கொண்டு வாருங்கள். அவ்வாறு கொண்டு வருவோருக்கு ரூ.5 லட்சம் பரிசாக நான் அளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரின் பேட்டி இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.