பிரேசில் அதிபர் தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் ஒருவரான ஜயார் போல்சேனார்ரூ தேர்தல் பரப்புரை பேரணி ஒன்றில் கத்தியால் குத்தப்பட்டார்.
தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராய்ஸ் ஜூய்ஸ் டி ஃபோரா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பேரணியில் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான இவர் தாக்கப்பட்டுள்ளார்.
அவரது கல்லீரல் மற்றும் குடல் காயங்களுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவரது உடல்நிலை, தற்போது சீராக இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இனவெறிக்கு ஆதரவான மற்றும் ஒருபாலுறவுக்கு எதிரான தன்னுடைய நிலைபாடுகளால் பிரேசிலிலுள்ள பலரையும் கோபத்திற்குள்ளாக்கியுள்ள சர்ச்சைக்குரிய இந்த அரசியல்வாதி, சமீபத்திய தேர்தல்களில் சாதகமான முடிவுகளை பெற்றிருந்தார்.
இந்த அதிபர் தேர்தலில் நிற்பதற்கான தடையை மாற்றுவதற்கான முயற்சியில் முன்னாள் அதிபர் லூலா டி சில்வா தோல்வியடைந்தால், அடுத்த மாதம் நடைபெறுகின்ற அதிபர் தேர்தலில் ஜயார் போல்சேனார்ரூ அதிகபடியான வாக்குகளை பெறலாம் என்று கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
இந்த சம்பவம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவுகள், போல்சேனார்ரூ கை கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டுவதையும், கத்தியால் குத்தப்பட்டதாக தோன்றியபோது, ஆதரவாளர்களால் தூக்கி உயர்த்தப்படுவதையும் காட்டுகின்றன.
பின்னர் அவர் வலியால் துடித்தவுடன், அவரை கீழிறக்கிய ஆதரவாளர்கள் அவரை காரில் ஏற்றி செல்வதையும் காணொளிகள் காட்டுகின்றன.
இந்த தாக்குதல் நடைபெற்ற பிறகு, இந்த காயம் மேலோட்டமானது என்று தொடக்கத்தில் ட்விட்டர் செய்தி பதிவிட்ட அவரது மகன் ஃபிலாவியோ, 2 மணிநேரத்திற்கு பின் வருத்தமான செய்தியை தெரித்தார்.
“எதிர்பார்க்கப்பட்டதைவிட இந்த கத்திக்குத்தால் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்ட அவர், கத்திக்குத்து காயம் கல்லீரலின் ஒரு பகுதி வரை ஆழமாக சென்றுள்ளது. நுரையீரல் மற்றும் குடலை கடுமையாக காயப்படுத்தியுள்ளது. அதிக ரத்தம் கொட்டி, 10/3 ரத்த அழுத்தத்தோடு ஏறக்குறை இறக்கும் தருவாயில் தந்தை மருத்துவமனை கொண்டு சேர்க்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தயவுசெய்து அவருக்காக பிராத்தனை செய்யவும்,” என்று ஃபிலாவியோ கூறியிருந்தார்.
அடெலியோ ஒபிஸ்போ டி ஒலிவெள்ரா என்ற சந்தேக நபர் ஒருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றங்களை தடுப்பதில் வலிமையான ஒரு தலைவராக இவர் இருப்பார் என்று போல்சேனார்ரூவுக்கு ஆதரவளிப்போர் கருதுகின்றனர்.
சோசியல் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிடும் 63 வயதான போல்சேனார்ரூவை சமூக வலைதளங்களில் மில்லியன்கணக்கான பிரேசிலியர்கள் பின்தெடர்கின்றனர். பலரும் அவரை “பிரேசிலின் டிரம்ப்” என்று வர்ணிக்கின்றனர்.
துப்பாக்கி கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு ஆதரவு தெரிவிக்கும் இவரது கருக்கலைப்புக்கு எதிரான சமரசமற்ற நிலைப்பாட்டால் மில்லியன் கணக்கான புரடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் ஆதரவு அளிக்கின்றனர்.