பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய அதிதீவிர மாங்குட் சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல்களை தேடும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பென்குவாட் மாகாணத்தில் உள்ள சுரங்க நகரான இடோகனில், ஒரே கூரைக்கு அடியில் இருந்த 32 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர்.
50 அடி கீழே இடிந்த மரத்துண்டுகள், கலவைகளை தாண்டி மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளை கொண்டு இடிபாடுகளுக்கு மத்தியில் உடல்களை தேடி வருகின்றனர்.
குவாண்டாங் மாகாணத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். அதில் மூன்று பேர் மரம் விழுந்து கொல்லப்பட்டனர்.
விவசாயத்தை மையமாக கொண்ட காக்கயான் மாகாணத்தில், பயிர்களுக்கு பெருத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் இம்மாதிரியான சூறாவளிகள் அடிக்கடி ஏற்படுவது சகஜமான ஒன்றுதான் என்ற போதிலும் இந்த மாங்குட் புயல் 2013ஆம் ஆண்டு 7000 பேரை பலிவாங்கிய ஹயன் புயலை நினைவூட்டுகிறது.
அந்த புயலுக்கு பிறகு தயாரிப்புகளும், வெளியேற்ற முறைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மாங்குட் புயல் குறித்து முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பயணங்கள் தடை செய்யப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டு மேலும் ராணுவம் தயார் நிலை வைக்கப்பட்டிருந்தது.
என்ன நடந்தது?
பிலிப்பைன்ஸின் முக்கிய தீவான லூசானில் வார இறுதியில் ஏற்பட்ட புயலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். குறிப்பாக பென்கெட் மாகாணத்தில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் பலியாகினர்.
உகாப் என்ற கிராமத்தில் தங்கச் சுரங்க தொழிலாளர்கள் இரண்டு அடக்கு குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த கட்டடம் நிலச்சரிவில் இடிந்து விழுந்தததை அடுத்து அங்கு தங்கியிருந்த 29 பேரை காணவில்லை என குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பை சேர்ந்த நவிதாத் தெரிவித்துள்ளார்.
இதில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவே உடல்களை தேடி வருகின்றனர் என நவிதாத் தெரிவித்துள்ளார்.
“சுரங்க தொழிலாளர் அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டது ஆனால் அந்த இடிபாடின் அருகில் இருந்த சுரங்கம் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்துள்ளது” என சுரங்கங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை தடுக்க பாதுகாப்பு படைகளை பணியமர்த்த போவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இந்த மாங்குட் புயல் சீனாவையும் தாக்கியது. ஞாயிறன்று ஜியாங்மென் கடற்கரை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சில தசாப்தங்களில் ஏற்பட்ட மிக வலுவான புயல் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்கு பக்கம் சென்ற புயல் தற்போது வலுவிழந்துள்ளது.
குவாண்டாங் மற்றும் ஹய்னான தீவில் 2.5மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஹாங்காங்கை தாக்கிய மாங்குட் புயலால் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, ரயில்கள் நிறுத்தப்பட்டன மேலும் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டன.