எதிர்பார்ப்பில் இருக்கும் அனிமேஷன் படங்கள்.
அனிமேஷன் திரைப்படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் ஒரு துறை. சிறிய வயதில் நாம் கார்டூனாக, புத்தகமாக ரசித்தவற்றைத் திரைக்கதை வடிவில் பார்ப்பதென்பதே ஒரு பேரின்பம்.
உதாரணமாக தற்போது ஏதேனும் ஒரு அனிமேஷன் திரைப்படம் வெளியானால், திரையரங்குகளில் குட்டிக் குழந்தைகளைவிட மீசையும், தாடியும் வைத்த 90ஸ் கிட்ஸ்களைத்தான் அதிகமாகக் காண முடியும்.
இத்துறை, வருடத்துக்குப் பல மில்லியன் சம்பாதிக்கும் வல்லமைகொண்டது. அதனாலே மற்ற முக்கியமான படங்களோடு சேர்த்து, சில அனிமேஷன் படங்களும் வெளிவரும்.
2018-ம் ஆண்டு அனிமேஷன் துறைக்கு, நல்ல வருமானம் தந்த படம், `Incredibles-2′, கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலர் வசூலித்தது. தொடர்ந்து, பல படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
ஹாலிவுட் உலகில் பச்சை நிற மனிதன் என்றால், ஹல்க். அதேபோல் அனிமேஷன் உலகில் பச்சை நிற ஆள் என்றால் அது க்ரின்ச்தான். மெலிந்த உடல், அடர்த்தியான ரோமங்கள், உருண்டை வடிவ வயிறு…
இதுதான் க்ரின்ச்சின் தோற்றம். இந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு, `டாக்டர் சீயூஸ்’ எழுதிய `How the Grinch stole christimas’ எனும் புத்தகத்தில் வெளியானது. பின்னர், இது திரைப்படமாக உருமாறியது.
கிறிஸ்துமஸ் விடுமுறையில் மற்றவர்களின் பரிசுப் பொருள்களைத் திருடி, பின்னர் அதன் மகத்துவத்தை உணரும் க்ரின்ச், மனம் திருந்தும் விதமாகக் கதை அமைக்கட்டிருக்கும்.
ரசிகர்களிடையே, பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், டிவி சீரியலாகவும், திரைக்கதை அமைப்புகளில் சில மாற்றங்கள்கொண்டு வந்து, திரைப்படங்களாகவும் வெளிவந்தது.
இப்படத்துக்கு, மைக்கேல் லீசியூர், டாமி ஸ்யூர்ட்லோவ் ஆகிய இருவர் திரைக்கதை அமைத்துள்ளனர். கிர்ன்ச் செய்யும் சேட்டைகளைப் பார்ப்பதற்காகவே, பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்க். இந்த வருடம் நவம்பரில் வெளியாக உள்ளது.
2010-ம் ஆண்டு வெளியான படம், `How to train your dragon’. இதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில், இப்படத்தின் மூன்றாம் பாகமும் கொஞ்ச நாள்களில் வெளிவர இருக்கிறது. இந்தப் பாகத்தில் ஹீரோவான `Hiccup’, தனது டிராகன் `Toothless’ உடன் உடோபியா கிராமத்தில் வசிக்கிறான் என்பதுபோல் கதை இடம்பெறும்.
இப்படத்தின் கதையே அதகளமாக இருக்கும். `How to train your dragon’ புத்தக பாகங்களை அடிப்படையாக வைத்து, க்ரெஸிடா கோவெல் மற்றும் டியன் ப்ளோசிஸ் இதற்குத் திரைக்கதை அமைத்துள்ளனர்.
படத்தை டியன் ப்ளோசிஸ்ஸே இயக்கியுள்ளார். 2010-ம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம் 3D, வித்தியாசமான திரையமைப்பு எனப் பல்வேறு விஷயங்களில் தெறிக்கவிட்டது. இந்த வரிசையில் `How to train your dragon:The hidden world’ படமும் மக்களை குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் படத்துக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. அனிமேஷன் திரைப்பட வரலாற்றில் நிச்சயம் இந்தப் படத்துக்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் கட்டாயம் உண்டு.
இந்தப் படத்தின் முதல் பாகம், 1995-ல் வெளியானது. அமெரிக்கத் திரையரங்குகளில் இத்திரைப்படம் சக்கைப்போடு போட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து 1999-ல் இரண்டாவது பாகம், 2010ல் மூன்றாவது பாகம் என வரிசையாக வெளிவந்தது.
வசூலில் வெற்றிநடைபோட்ட இத்திரைப்படத்தின் நான்காம் பாகம், 2019-ல் வெளியாக இருக்கிறது. படத்தின் கதை, பொம்மைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள ஓர் உறவைப் பற்றி சொல்வதுதான். இத்திரைப்படத்தை ஜோஷ் கூலி இயக்குகிறார்.
திரைக்கதை அமைத்தவர்கள் பெரும்பாலும் முதல் பாகத்திலிருந்தே பணியாற்றியவர்கள்தாம். மற்ற பாகங்களைப் போல் இந்தப் பாகமும் ஹிட் லிஸ்டில் கட்டாயம் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, அனிமேஷன் படங்கள் வெளியான பிறகு அது கேம்களாக உருமாறும். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இமாலய ஹிட்டடித்த `ஆங்க்ரி பேர்ட்ஸ்’ கேம், படமாக அவதரித்தது. இப்படத்துக்கு, பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
புத்தகத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பதுதான் வழக்கம். `டாம்ப் ரைடர்’ கேம் படமாக வெளிவந்திருக்கிறது. ஆனால் அனிமேஷன் படமாக வெளிவந்தது, இதுதான் முதல் படம். பறவையின் முட்டைகளைப் பன்றிகள் திருடிச் சென்றுவிடும். அதை எப்படிப் பறவைகள் மீட்கின்றன என்பதே மையக்கதை.
`இதைப் படமாக்கினால் எப்படி வெற்றி கிடைக்கும்’ என்று எழுந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது. கை வலிக்க இந்த கேமை விளையாடியவர்கள், வயிறு குலுங்க இப்படத்தைப் பார்த்துச் சிரித்ததே, இதற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.
இதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் அப்லாஸை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.