எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினமே அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும், இந்த தீர்மானத்தின் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தாங்கள் ஆளுநருக்கு கெடு விதிக்க முடியாது எனவும் தமிழக அரசு கூறியிருந்தது.
இதையடுத்து, ஆளுநர் இந்தப் பரிந்துரை தொடர்பாக மத்திய அரசின் கருத்தைக் கேட்டுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவ்வாறு மத்திய அரசிடம் எந்தவித கருத்தையும் கேட்கவில்லை என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும், இதுகுறித்து வெளிப்படையான, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 28 ஆண்டுகாலமாக சிறையில் அடைபட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி அளித்த தீர்ப்பின்படி, கடந்த 9-ம் தேதி அமைச்சரவைக் கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்திட வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆளுநர் பரிசீலனையில் உள்ள அமைச்சரவை தீர்மானம் குறித்து, காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று விடுதலை செய்ய வேண்டும்” என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.