இலங்கையில் இருந்து போர் காரணமாக வெளிநாடுகள் சென்றவர்கள் இனி இலங்கையிலும் வெளிநாடுகளிலுமாக இரட்டைக் குடியுரிமை பெறும் வாய்ப்பொன்று இன்று முதல் ஆரம்பமாகியிருக்கிறது.
இதனால் புலம் பெயர் தமிழருக்கு என்ன இலாபம்..?
டென்மார்க்கில் பிறமத பாஸ் என்னும் கடவுச்சீட்டு இருப்பதால் இலங்கை பயணம் செய்ய முடியாதிருப்போர் பலர். இவர்கள் இனியாவது இலங்கை செல்வதற்கு புதியதோர் வழி பிறந்துள்ளதாகக் கருதலாம்.
ஆகவே இரட்டை குடியுரிமை எடுத்தால் பிரச்சனையை தீர்க்க வழியுண்டு.
மேலும் கொழும்பு விமான நிலையத்தில் பழைய கெடுபிடிகள் இல்லாத நிலை ஒன்று காணப்படுவதாகவும் இலங்கை சென்றுவந்த பலர் கூறுகிறார்கள்.
ஆகவே புதிய சூழலை பயன்படுத்தி இலங்கை செல்ல முடியும். ஆனால் பிறமத பாஸ் என்னும் கடவுச்சீட்டுடன் இரட்டை குடியுரிமை பெறுவது எப்படி என்பது தெரியவில்லை. இது குறித்து இன்று வீரகேசரியில் வெளியான செய்தி இப்படியுள்ளது.
——-
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசிப்போருக்கு தற்போது இலங்கைப் பிரஜாவுரிமையினையும் வழங்குவதன் மூலம் அவர்களால் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய முடியும். பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொண்டவர்கள் வெளிநாடுகளிலேயே வசிக்காமல், அனைத்துத் துறைகளிலும் நாட்டின் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார்.
இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த போதிலும் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாதவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.