திமுக என்றாலே சிம்ம சொப்பனம் தான் என்பதால், எப்போதும் நடுங்கும் முதல்வரும், ஆட்சியாளர்களும் துணிவிருந்தால், எங்கள் மீது வழக்குப் போடட்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் பதவிக்கே களங்கம் விளைவிக்கும் வகையில், நாளொரு ஊழல் பொழுதொரு முறைகேடு என கஜானாவைத் தினந்தோறும் திருடிக் கொழுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவையினர், தங்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க நினைத்து, திமுகவுக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்தி, ஜனநாயகத்தையே நகைச்சுவைப் பொருளாக்கி நாற்றமெடுக்கச் செய்திருக்கிறார்கள்.
கடந்த 2011 முதல் ஆட்சியில் இருப்பது அதிமுக.தான்; திமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது. எங்காவது, 7 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியாக உள்ள அரசியல் கட்சிக்கு எதிராக, ஆளுங்கட்சியின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லாரும் கூடிக் கும்மாளமிட்டு போராட்டம் நடத்திக் கூப்பாடு போடும் கேலிக்கூத்தைக் கேட்டதுண்டா? கண்டது உண்டா? அந்த இழிவான – மலிவான பெயரைப் பெற்றவர்கள்தான் அதிமுக ஆட்சியாளர்கள்.
ராஜபக்சே ஏதோ சொல்லி விட்டார் என்று, அதை முழுமையாகக் கூடப் படித்துணராமல், திமுக மீதும், காங்கிரஸ் மீதும் போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டும், கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறது ஆளுங்கட்சியான அதிமுக. ஈழப்பிரச்சினையில் 1956 முதல் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் இயக்கம் எது என்பதும், ஐநா மன்றம் வரை சென்று அதற்காக மனு அளித்த இயக்கம் எது என்பதும் ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டு மக்களும் நன்கறிந்த உண்மைதான்.
அதேநேரத்தில், போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்; பிரபாகரனைக் கைது செய்து கொண்டுவந்து தண்டனை தர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி ஏகடியம் பேசி எள்ளி நகையாடி, ஈழத்தமிழருக்கு உதவி செய்த காரணத்திற்காக திமுக ஆட்சியைக் கலைத்திட, ஜனநாயக விரோதக் குரோதத்துடன் செயல்பட்டது அதிமுக என்கிற துரோக வரலாறும் பதிவாகியிருக்கிறது; அதை ஈழத்தமிழர்களும் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள்.
துரோகமும், ஊழலும் அதிமுக என்ற அரசியல் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்றை மறைத்தாலும் ஒன்று வெளிப்பட்டே தீரும். அதை அறியாத அரசியல் அறிவிலிகள், திமுக மீது ஈழப் பிரச்சினைக்காகக் குற்றம் சுமத்தி, கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியதை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களும் ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை; ஏன் அதிமுகவினரே அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதன் அடையாளமாகத்தான், கண்டனப் பொதுக்கூட்டத்தில் ஆபாச நடனம் அரங்கேறியிருக்கிறது. அந்த அருவருப்பைப் பார்த்தால் ராஜபக்சேவே கூடச் சிரித்து அலட்சியம் செய்திருப்பார்.
எடுத்துக்கொண்ட பிரச்சினையைக் கூடப் பேசாமல் அல்லது ஈழப் பிரச்சினையின் அறுபதாண்டு கால வரலாற்றைப் பேசத் தெரியாமல், திமுகவைப் பற்றி மட்டுமே, முதல்வரில் தொடங்கி அத்தனை பேரும் பேசியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே, எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுகதான் மக்களின் மகத்தான செல்வாக்கைப் பெற்றிருக்கும் இயக்கமாக இருக்கிறது என்ற உண்மை, அதிமுகவினரை உறங்க விடாமல் உறுத்திக்கொண்டே இருக்கிறது என்பது புரிந்துவிடும்.
ஊழல் ஆவணங்கள் ஒவ்வொரு நாளும் சிக்கிக்கொண்டே இருப்பதால், மாநில ஆட்சியாளர்களைத் தன் கைப்பாவையாக வைத்திருக்கும் மத்திய பாஜக அரசு இந்த கேலிக்கூத்துப் பொதுக்கூட்டத்தின் பின்னணியில் இருக்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. காரணம், கொடுங்கோலன் ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரை சந்திக்க வைத்தவரே பாஜகவைச் சேர்ந்த பிரமுகர்தான்.
அதுமட்டுமல்ல, ஈழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளை – அவர்களின் கடற்படைப் பிரிவினை ஒடுக்கி அழிப்பதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் உதவினார் எனவும் அவர் இல்லையென்றால் எங்களால் கடற்புலிகளை அழித்தொழித்திருக்க முடியாது என்றும் ராணுவ ரீதியான உதவி – பயிற்சிகளை வாஜ்பாய் அளித்தார் எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அங்குள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று இரங்கல் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.
அப்படியென்றால், அதிமுகவினருக்கு உண்மையாகவே ஈழத்தமிழர் மீது அக்கறை இருக்குமென்றால், வாஜ்பாய் அவர்கள் சார்ந்திருந்த பாஜகவைக் கண்டித்துதானே முதற்கட்டமாகப் பொதுக்கூட்டம் – போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். எஜமானர்களை எதிர்த்து எப்படிப் போராட்டம் நடத்த முடியும்? அதுவும் தங்களின் ஊழல் சிண்டு வசமாக டெல்லி எஜமானர்களிடம் சிக்கியிருக்கும் போது அவர்கள் உத்தரவுக்கேற்பத்தானே ஊளையிட முடியும்.
கொள்ளையடிப்பதற்காகவே பதவி ஒன்றையே குறியாகக் காப்பாற்றிக்கொண்டு, மாநில உரிமைகளை எல்லாம் மத்திய அரசிடம் வலிந்து சென்று அடகு வைத்துள்ள ஆட்சியாளர்கள், அடுத்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திப் பேசுவது, தங்கள் முகத்தைத் தாங்களே கண்ணாடியில் பார்க்க சகிக்காமல் பயந்து நடுக்கம் கொள்வதற்குச் சமமானது. திமுக ஆட்சியில் ஊழல் என்றால் இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் நீங்கள் வழக்குப் போட்டு நிரூபித்திருக்க வேண்டியதுதானே?
அதை யார் தடுத்தார்கள்? புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் என்று சொல்லி, நீங்கள் அமைத்த விசாரணை கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் அளித்துள்ள சான்றிதழைப் படித்துப் பாருங்கள். ஊழலில் புரண்டு புழுத்துப் போனவர்கள் யார் என்பது தெரியும்.
தலைமைச் செயலகத்தில் ரெய்டு, டிஜிபி அலுவலகத்தில் ரெய்டு, அமைச்சர்கள் வீடுகளில் எல்லாம் ரெய்டு என ஊழல் முறைகேடுகளால் தமிழ்நாட்டின் தனிப்பெருமை தாழ்ந்து போய் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கிய குட்கா ஊழலை சட்டப்பேரவையிலேயே ஆதாரத்துடன் நிரூபித்த கட்சிதான் திமுக. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக, ஆதாரப்பூர்வமாக செயல்பட்டு நீதிமன்றத்தை நாடிய காரணத்தினால் தான், குட்கா ஊழல் இன்று சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
அதேபோல், முதல்வர் தன்னுடைய சொந்தங்களுக்கு நெடுஞ்சாலைத் துறையில் அளித்த டெண்டர்களில் ஊழல், துணை முதல்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என தொடர்ந்து ஊழல் பட்டியல் விசாரணைக்கு அணிவகுத்து நிற்கின்றன.
அவை எதுவரை போகுமோ என்றெண்ணி கவலை உங்களை வாட்டினால், அதற்கு நானா பொறுப்பு? காற்றாலை மின்சார ஊழல் குறித்து ஆதாரத்துடன் விளக்கிய நிலையில், என் மீது பாய்ந்தாரே மின்துறை அமைச்சர், வழக்குப் போடுவேன் என்றார். தாராளமாகப் போடட்டும் என நான் சொன்ன பிறகும், மின்சார ஷாக் அடித்த மாதிரி பம்முகிறாரே ஏன்? அதிமுக ஆட்சியின் ஒவ்வொரு ஊழல் தொடர்பாகவும் நீதிமன்றத்திற்கு திமுக சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரைகுறை அச்சுறுத்தலுக்கு எல்லாம் யாரும் அஞ்சமாட்டார்கள். திமுக மீது அப்படி குற்றம் சுமத்த முடியுமென்றால், நீதிமன்றத்தில் சென்று நிரூபித்துக் காட்டட்டும். அதற்கு தெம்பின்றி ஈழத்தமிழர்களின் பெயரால் அரசியல் லாபம் தேட முயற்சித்து, அதில் திமுக மீது ஊழல் புகார் சொல்வதும், திமுகவை ஒரு கம்பெனி எனப் பேசுவதும் நாவடக்கம் இல்லாத நாலாந்தரச் செயல் என முதல்வரையும் அவரைச் சார்ந்தவர்களையும் எச்சரிக்க விரும்புகிறேன்.
முதல்வர் பதவியைப் பயன்படுத்தி ஊழல் செய்வதற்காகவே எத்தனையெத்தனை கம்பெனிகளை அதிமுக கட்சித் தலைமை ஆரம்பித்தது, எவ்வளவு கொள்ளையடித்தது என்பது நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின் மூலமும், அதனை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமும் உலகத்திற்கே தெரிந்துவிட்டது.
அந்த அழுக்கு நிறைந்த வரலாற்றிலிருந்து அதிமுகவால் ஒருபோதும் தப்பிக்க முடியாது. ஊழல் வழக்குக்காக இரண்டு முறை, ஒரு முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்ட மலிவான பெருமையும் இந்திய வரலாற்றிலேயே அதிமுக என்ற போலி கம்பெனிக்குத் தான் உண்டு. எங்கள் முதுகை பார்ப்பதை விடுத்து, உங்கள் முகத்தைப் பாருங்கள். கரியும், கறையும் மட்டுமே அதில் அப்பிக் கிடக்கிறது.
திமுக என்பது விமர்சனங்களையும், பழிச்சொற்களையும், நெருக்கடிகளையும் துணிவுடன் எதிர்கொண்டு நெருப்பாற்றில் நீந்தி புடம் போட்ட தங்கமாக எழுந்து நிற்கிற இயக்கம். ஆட்சி மாறும்; காட்சி மாறும்; கவனத்தில் கொள்க” என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.