‘தேவர் மகன்’ இரண்டாம் பாகத்தின் கதையைக் கமல்ஹாசன் எழுதி வருகிறார் எனத் தகவல் உலா வருகிறது.
பரதன் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி ரிலீஸான படம் ‘தேவர் மகன்’. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அவருடைய அப்பாவாக சிவாஜி கணேசன் நடித்தார். கெளதமி, ரேவதி இருவரும் ஹீரோயின்களாக நடிக்க, நாசர், வடிவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
கமல்ஹாசன் இந்தப் படத்துக்குக் கதை எழுதியதோடு, தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரித்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்தார். இந்தப் படம் ரிலீஸாகி, அடுத்த மாதத்துடன் 26 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது.
இந்நிலையில், ‘தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கானக் கதையை கமல்ஹாசன் எழுதி வருவதாக தகவல் உலா வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு, கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
தற்போது ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். வருகிற ஞாயிற்றுக்கிழமையுடன் (செப்டம்பர் 30) இந்த நிகழ்ச்சி முடிகிறது. அதன்பிறகு ‘சபாஷ் நாயுடு’ படத்தின் வேலைகளைத் தொடரும் கமல்ஹாசன், அதன்பிறகு ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க இருக்கிறார். ஷங்கர் இயக்கவுள்ள ‘இந்தியன் 2’, அனேகமாக டிசம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு, இதிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியைத் தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், ‘இந்தியன் 2’ படம்தான் நான் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்றும், அதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், ‘தேவர் மகன்’ இரண்டாம் பாகத்தின் கதையை கமல் எழுதி வருவதாக வெளியான தகவல், அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.