அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் முதலாவது கறுப்பின அமெரிக்க அதிபருமான பராக் ஒபாமா நேற்றிரவு தனது தனி விமானத்தில் டென்மார்க் வந்தடைந்தார்.
இன்று அவர் டென்மார்க் சுல்டென்ஸ்க் பல்கலைக்கழகம் மற்றும் பிஸினெஸ் கோல்டிங் ஆகிய இரு கருத்தரங்கங்களில் உரையாற்ற இருக்கிறார்.
இவர் வருகையை டென்மார்க்கின் கோல்டிங் நகரசபை வரலாற்று புகழ் மிக்க நிகழ்வாக பதிவு செய்யக் காத்திருக்கிறது. இன்று மாலை கோல்டிங் வர்த்தகம் என்ற நிகழ்வில் ஒபாமா பேசுகிறார்.
இவர் தனி விமானத்தில் வந்துள்ளார், சீரான பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் பதவியில் இருக்கும் ஓர் அதிபர் வரும் போது கொடுக்கப்படும் பலத்த பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை.
வீதிப் போக்குவரத்துக்கள் தடை செய்யப்படவில்லை.
ஆனால் மண்டபத்தில் கைத்தொலைபேசி அனுமதிக்கப்பட மாட்டாது, விமான நிலையத்தின் பரிசோதனைகள் இடம் பெறும். போலீசார் சிவில் உடையில் மக்களோடு மக்களாக கலந்திருப்பார்கள்.
எதிர்கால தலைமைத்துவமும் தனித்துவமும் என்ற பொருளில் உரையாற்ற இருக்கிறார். இதுபோல பில் கிளிண்டன், ஜோர்ஜ் டபிள்யூ புஸ் போன்றவர்களும் வந்துள்ளதால் அதற்கேற்ற பாதுகாப்பு வழங்கப்படும்.
ஏற்கெனவே அமெரிக்க இரகசிய போலீஸ் பிரிவினர் இப்பகுதிக்கு வந்து பாதுகாப்பு நிலைகளை பரிசோதித்த பின்னரே பயணங்கள் இடம் பெறுகின்றன.
அவர் தங்கும் கோட்டல், பயணிக்கும் வழி, விமான நிலையங்கள் பற்றிய தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. டென்மார்க் நிகழ்வை முடித்து கொலண்ட் பயணிக்க இருக்கிறார்.
இவருடைய உரையை கேட்க பல்வேறு நிறுவனங்களின் தொழில் அதிபர்களும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ஒபாமா என்ன சொல்கிறார்கள் என்பதைவிட அவர் நடத்தும் நவீன சிந்தனைகள் கொண்ட உரையை கேட்பது பெருமைக்குரிய விடயம் என்று பலர் கருதுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டு ஒன்றின் விலை 17.500 குறோணர்கள். இலங்கை விலையில் 4,55,000 ரூபா என்றாலும் கூட்டம் அலை மோதுகிறது. இந்தப் பணத்தொகை ஒரு பொருட்டல்ல என்று கருதுவோர் டென்மார்க்கில் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் அதிபர்களாக இருந்தவர்கள் பதவிக்காலம் முடிந்ததும் விரக்தியில் பத்திரிகைகளை பார்ப்பதும், தமது செய்தி வரவில்லையே என்று கவலை கொள்ள வேண்டிய தமிழ் அரசியல்வாதிகளின் நிலை இல்லை. அவர்களுடைய அதிகாரத்திற்கு பிந்திய வாழ்வையும் பரபரப்பாக வைத்திருக்கவும் பல அரிய பணிகளை செய்யவும் இவர்களை அமெரிக்கா நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறது.
தகுதியுள்ள தலைவர்களை விலத்தி பழிவாங்கும் கீழை நாடுகளின் கொடுமையை அறிவால் தவிர்த்துள்ளனர்.
பழைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் 85 வயதாகியும் வடகொரியாவிற்கு விஜயம் செய்திருக்கிறார். பதவிக்காலம் முடிந்த அதிபரை கேலி செய்வது, மதிக்காமல் நடப்பது போன்ற அவல அரசியலை அமெரிக்கா தவிர்த்திருக்கிறது. அந்த வெற்றியின் ஓரங்கமே இன்றைய அமெரிக்க அதிபரின் வரவு.
மேலும் இது போன்ற நவீன சிந்தனை கொண்ட நிகழ்வுகளை உலகப்புகழ் பெற்ற மனிதர்களை வரவழைத்து நிகழ்த்துவது இன்றைய ஐரோப்பாவில் ஒரு புதிய மரபாகவும் நவீன கலாச்சாரமாகவும் மாறிவருகிறது.
தொழில் அதிபர்கள் பலர் இது போன்ற அழைப்புக்களுக்கு விரும்பிச் செல்கிறார்கள்.
சமீபத்தில் தொழிலதிபர் அலிபாபா நிறுவன உரிமையாளர் பேசும்போது நமத பாடசாலைகளின் கல்வித்திட்டங்கள் புரி தேய்ந்து பழமையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தான் எவ்வளவோ முயன்றும் பல்கலைக்கழகம் போக முடியவில்லை என்ற அவர் இன்று தனது நவீன கிரியேட்டிவ் சிந்தனையால் உலகத்தில் உள்ள மிகப்பெரிய பல்கலைக்கழகங்களால் வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் கிரியேட்டிவ் என்னும் புத்தாக்க சிந்தனையை முக்கிய பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று கூறுகிறார். இப்போதுள்ள புரி தேய்ந்த கல்வி 200 வருட வரலாற்றை கொண்டு தோல்வியடைந்துவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆகவேதான் பாடசாலை கல்வியையும் பல்கலைக்கழக கல்வியையும் ஓர் அடிப்படையாக வைத்துக் கொண்டு இதுபோன்ற உலகப் பிரபலங்களின் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து மாணவர்களை மேம்படுத்துவதை ஒரு புதிய கலாச்சாரமாக மாற்றி வருகிறார்கள்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இன்று ஆற்றவுள்ள உரையில் அவருடைய பதவிக்கால அனுபவங்கள் பல கூறப்படுமென்று எதிர்பார்க்கலாம்.
அதை அறிய ஆவலுள்ள மாணவர்களில் நுழைவு சீட்டு எடுக்க பொருளாதார வசதியில்லாத மாணவர்கள் 10 பேருக்கு இலவசமாக நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு ஒரு ரூபா இரண்டு ரூபா விடயமல்ல பெரும் பணம் சுழலும் நிகழ்வாகும். அதற்கேற்ப பராக் ஒபாமாவும் பலமான ஆயுத்தங்கள் செய்தே வருவார். இவைகளை பணம் கொடுக்காமல் தொலைக்காட்சிகளில் பார்க்க முடியாது, எவையும் இலவசமல்ல.
300 ரூபா பணம், குவாட்டர், புரியாணி கொடுத்து கூட்டத்திற்கு ஆட்களை சேர்க்கும் ஆசிய தலைவர்கள் தமது சமுதாயத்தை முதலில் பெறுமதி மிக்க சமுதாயமாக மாற்ற வேண்டும்.
ஆகவே இந்தச் செய்தியின் உள்ளடக்கத்தை படிப்போர் பரிமாற வேண்டும். செத்த வீட்டு செய்தியை பரிமாறுவதைவிட இது முக்கியமல்லவா..?
அலைகள் 28.09.2018 வெள்ளி