நடிகர் அஜித்குமார் ஆலோசகராக இருந்து மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், சமையல், புகைப்பட கலைஞர், ஹெலி டிசைனர்,மெக்கானிக் என பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மோட்டார் பைக் பந்தயங்களில் ஆர்வமுள்ள அஜித் இதற்காக நடிப்பதை ஒத்திவைத்து விட்டு வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று போட்டிகளில் பங்கேற்று வந்தார். விமானம் ஓட்டுவதிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. விமானம் ஓட்டும் லைசென்சும் வாங்கி வைத்துள்ளார். சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்துள்ளார்.
ருசியாக பிரியாணி சமைப்பார். படப்பிடிப்பின் கடைசி நாளில் தனது கையால் பிரியாணி சமைத்து படக்குழுவினருக்கு பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் அஜித்குமாருக்கு புதிய பதவி வழங்கப்பட்டது. அந்த கல்லூரியின் ஹெலிகாப்டர் சோதனை விஞ்ஞானி மற்றும் ஆளில்லா விமான பயிற்சி ஆலோசகராக அவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். எம்.ஐ.டி. மாணவர்கள் மருத்துவ உதவிகளுக்கான ஆளில்லா விமானத்தை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
அந்த குழுவுக்கு தக்ஷா என்று பெயரிடப்பட்டுள்ளது. தக்ஷா குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த தக்ஷா ஆளில்லா விமானங்கள் அதிக நேரங்கள் பறந்து ஏற்கனவே சாதனை படைத்திருந்தது. தக்ஷா குழுவின் ஆலோசகராக பணியாற்ற ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார் அஜித்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் 111 பொறியியில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் தக்ஷா குழுவினரும் கலந்து கொள்ள, அவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் 6 மணி நேரம் 7 நிமிடம் விண்ணில் பறந்து சாதனை புரிந்துள்ளது. மேலும் இது கின்னஸ் குழுவினருக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆளில்லா விமானம் 10 கிலோ வரையிலான எடையை சுமக்கும் என்பதால் இதை ஏர் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் என அஜித் யோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனையை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பியில் கடந்த 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. உலகெங்கிலும் இருந்து 55 ஆளில்லா விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதில் தக்ஷா விமானம் இரண்டாவதாக இடம் பிடித்தது. போட்டி என்னவென்றால், ரத்த மாதிரியை ஒரு இடத்திலிருந்து எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை அடைய வேண்டும் என்பதுதான். அதில் தக்ஷா விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் என்ற விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.
விமானத்தின் பறக்கும் திறனைப் பொருத்தவரை தக்ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், மோனாஹ் விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றது.
மற்ற இரண்டு தேர்வுகளில் தக்ஷா குழு சற்று குறைவான மதிப்பெண் எடுத்ததனால் 116.55 புள்ளிகளுடன் மோனாஹ் விமானம் முதலிடத்தையும், 115.70 புள்ளிகளுடன் தக்ஷா விமானம் இரண்டாம் இடத்தையும் பெற்றது. தக்ஷா விமான போட்டி நடைபெற்ற போது, நடிகர் அஜித், விஸ்வாசம் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால், அவர் கலந்து கொள்ளவில்லை.