இங்கிலாந்து நாட்டு பொருளாதாரத்தினை இந்தியா முந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அஞ்சார் பகுதியில் முந்த்ரா எல்.என்.ஜி. முனையம், அஞ்சார்-முந்த்ரா மற்றும் பலன்பூர்-பாலி-பார்மர் வாயு பரிமாற்ற திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
அதன்பின் உரையாற்றிய அவர், கடந்த 60 வருடங்களில் 13 கோடி குடும்பங்கள் நாட்டில் எரிவாயு இணைப்புகளை பெற்றுள்ளன. கடந்த 4 வருடங்களில் எனது அரசு 10 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகளை தந்துள்ளன. இங்கிலாந்து நாட்டு பொருளாதாரத்தினை இந்தியா முந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என கூறினார்.
பல பிரதமர்கள் மற்றும் முதல் மந்திரிகள் வந்து சென்றுள்ளனர். ஆனால் இங்கு 3வது எல்.என்.ஜி. (திரவ இயற்கை வாயு) முனையம் ஒன்றை தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம்.
அன்றைய மக்கள் பராமரிப்பு இல்லாத சாலைகளை பெற்றதற்கே மகிழ்ச்சி கொண்டனர். இன்றைய மக்கள் நவீன வளர்ச்சியை விரும்புகின்றனர். அவர்கள் ரெயில்வே, நெடுஞ்சாலை, ஐ-வே, எரிவாயு வசதி, நீர் வசதி, மின் வசதி, கண்ணாடி இழை நெட்வொர்க் ஆகியவை வேண்டும் என விரும்புபவர்களாக உள்ளனர். நவீன உட்கட்டமைப்பினை அவர்கள் வேண்டுகின்றனர்.
எனது அரசின் நோக்கம் வருகிற நாட்களில் ஒரு குடும்பம் கூட மர துண்டுகளை கொண்டு சமையல் செய்ய கூடாது என்பதே என அவர் கூறினார்.