இலங்கையில் போர் நடைபெறும் காலத்தில் குண்டு வீச்சு போன்றவற்றால் மக்கள் மரணமடைவதைப்போல இப்போதும் மக்கள் மரணமடையும் தொகை காணப்படுகிறது.
முன்னர் போர் காரணமாக இருந்தது இப்போதோ விபத்துக்கள் அந்த இடத்தை பிடித்துவிட்டன, மரண எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை.
ஒவ்வொரு மாதமும் 236 பேர் வீதி விபத்துக்களால் அந்த நாட்டில் மரணமடைகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த எட்டு மாத காலத்தில் 1890 பேர் வீதிவிபத்தில் மரணித்துள்ளனர், இவர்களில் 570 பேர் பாதசாரிகளாகவும் 638 பேர் மோட்டார் சைக்கிள் விபத்திலும் மரணித்துள்ளனர்.
அத்துடன், கடந்த 8 மாதத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 123 பேர் , சாரதிகள் 151 பேர் , பயணிகள் 259 பேர், சைக்கிளில் பயணித்த 144 பேர் என மொத்தமாக 1890 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மரணங்களுக்கு பிரதானமான காரணங்கள் என்ன..?
01. அதிகமான வேகம்.
02. மதுபானம்
03. வீதி விதிகள் செம்மைப்படுத்தப்படாது அரதப்பழையவையாக இருக்கின்றன.
04. விபத்து நடந்தால் காயப்பட்டவரை எடுத்துச் செல்ல போதிய ஆம்புலன்ஸ் வண்டிகள் கிடையாது. இரத்தம் ஓடி மடிய வேண்டியதுதான்.
05. வேகமாக ஓடி அகப்படும் சாரதிகள் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தால் போதும் என்று கூறுகிறார்கள். வேகப்பிரிவு போலீசார் மாதா மாதம் பெரும் தொகை பணத்தை மணியோடர் வழியாக அனுப்புவதாக சில செய்திகள் கூறுகின்றன. இன்று பெரும் வருமானம் தரும் தொழிலாக இருக்கிறது வீதியோர இலஞ்சம்.
06. தனியார் வாகன சாரதிகள் தூக்கம் விழித்து உழைப்பிற்காக ஓடி மற்றவரை மரணக்குழியில் விழுத்துகிறார்கள்.
07. சாரதி அனுமதி பத்திரம் சரியான கடும் பரீட்சைகள் இன்றி வழங்கப்படுகிறது.
08. விபத்தை குறைக்கும் வீதி அடையாளங்கள் அறவே இல்லை.
09. வாகனங்கள் புதிதாக வந்தாலும் அதற்கேற்ப சாலைகள் இல்லை இதனால் விபத்துக்கள் பெருகுகின்றன.
09. யாழில் இருந்து இரவு 9.30 ற்கு புறப்படும் பேருந்து அதிகாலை 04.00 மணிக்கு மட்டக்களப்பில் நிற்கிறதென்றால் அதன் வேகத்தை பாருங்கள்.
10. உலகத்தில் மிக மோசமான ஆபத்தான வீதிகளுக்கு உதாரணமாக இலங்கை வீதிகள் இருக்கின்றன. தமிழகத்தை போலவே மோசமானதும் வாகனங்களில் பயணிப்பது உயிராபத்து தருவதுமான அவலம் நிறைந்த வீதிகளாக இலங்கை வீதிகள் உள்ளன.
புலம் பெயர் தமிழர் போர் முடிந்துவிட்டதென அங்கு போனாலும் வீதிகளில் நடைபெறும் மரணங்கள் குறையவில்லை என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.
இலங்கை நிலப்பரப்பும் டென்மார்க் நிலப்பரப்பும் ஏறத்தாழ ஒன்று இலங்கையில் ஒரு மாதத்தில் நடைபெறும் விபத்து மரணங்கள் 230 என்றால் டென்மார்க்கில் ஒரு வருடத்தில் வீதி விபத்துக்களில் மரணிப்போர் தொகையே 230 ஆக இருக்கிறது. இரண்டும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக இருக்கிறது.
டென்மார்க்குடன் ஒப்பிட்டால் இலங்கையின் வீதி விபத்துக்கள் பத்து மடங்கு அதிகமாக உள்ளன. எச்சரிக்கை அவசியம்.