சர்வதேச ரீதியில் இன்று கொண்டாடப்படுகின்ற தினங்களில் முதியோர் தினமும், சிறுவர் தினமும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
முதுமை காரணமாக உடல்உள ரீதியாக தளர்ச்சியடைந்துள்ள முதியவர்களும், சிறுபராயம் காரணமாக உடல்உள ரீதியில் பக்குவம் பெறாத சிறுவர்களும் எமது சமூகத்தின் பிரத்தியேக பராமரிப்புக்கு உரியவர்களாவர். எனவே இவ்விரு பராயத்தினர் மீதும் இன்றைய உலகம் விசேட கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
முன்னொரு காலத்தில் மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பது வயதைக் கூட நெருங்கியதில்லை. மக்களில் பெருமளவானோர் ஐம்பது வயதை நெருங்குவதற்கிடையிலேயே தங்களது ஆயுளை பூர்த்தி செய்து கொள்ளும்படியாக நிலைமை இருந்தது.
இன்று நிலைமை அவ்வாறில்லை. உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் மனிதனின் ஆயுள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஐம்பது வயது என்பதெல்லாம் இன்றைய காலத்தில் முதுமைப் பருவம் அல்ல. எழுபது வயது தாண்டிய பின்னரும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர் பலர்.
பல்வேறு தொழில்துறைகளிலும் இளைஞர்களுக்கு நிகராக எழுபது வயது கடந்த பருவத்தினரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனைப் பார்க்கின்ற போது இளமைப் பருவம் எவ்விடத்தில் முடிவடைகின்றது என்பது பற்றியோ, முதுமைப் பருவம் எவ்விடத்தில் தொடங்குகின்றது என்பதையிட்டோ அறுதியிட்டுக் கூற முடியாமலிருக்கின்றது.
இத்தனைக்கும் காரணம் தற்கால மருத்துவ அறிவியல் வளர்ச்சி!
உலக நாடுகளில் ஐம்பது வயதுக்கு உட்பட்டதாகக் காணப்பட்ட மனிதனின் சராசரி ஆயுளை மருத்துவ அறிவியல் வளர்ச்சியானது படிப்படியாக உயர்த்திக் கொண்டு வந்திருக்கின்றது.
மனிதனின் ஆயுள் அதிகரித்து, ஒவ்வொருவரும் பன்னெடுங்காலம் வாழ்வதென்பது மகிழ்ச்சிக்குரியது என்பதில் ஐயமில்லை. எந்தவொரு மனிதனும் மிக நீண்ட காலம் வாழ்வதற்கே ஆசைப்படுகின்றான்.
ஆனாலும் மக்களின் ஆயுட்காலம் இவ்வாறு நீடித்துக் கொண்டு செல்வதனால் மற்றொரு புறத்தில் சவால்களும் எதிர்கொள்ளப்படுகின்றன. இது குறித்தும் இன்றைய உலகம் விசேட கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
உலகின் அனைத்து நாடுகளிலும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே செல்கின்றது. ஒவ்வொரு நாட்டினதும் மொத்த சனத்தொகையை எடுத்துக் கொள்வோமானால் முதியவர்களின் சதவீதம் அதிகமாகிச் செல்வது அறியப்பட்டுள்ளது. எமது நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
மருத்துவ பராமரிப்பு சற்று கூடுதலாக உள்ள ஜப்பான் போன்ற சில நாடுகளில் நூறு வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது தெரியவந்துள்ளது.
மக்களின் ஆயுட்காலத்தை அதிகரித்துக் கொண்டுள்ளமைக்காக மருத்துவ உலகம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். முதியவர்கள் பெருமளவில் வாழ்வதற்காக குறித்த நாடும் பெருமையடைய முடியும். ஆனாலும் எதிர்நோக்கப்படுகின்ற சவால்களை அலட்சியப்படுத்தி விட முடியாது.
முதுமைப் பருவத்தை அடைந்த பலர் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகின்ற நிலைமை காணப்படுகின்றது. வறுமை, பிள்ளைகளால் கைவிடப்படுதல், வயோதிபகால வியாதிகள், மனஅழுத்தம், மருத்துவக் கவனிப்பின்மை என்றெல்லாம் முதியவர்கள் பலர் பெரும் துன்பங்களுடன் வாழ்வதையும் காண முடிகின்றது. இன்றைய மருத்துவக் கண்டுபிடிப்புகளால் அவர்களது ஆயுள் அதிகரித்துள்ள போதிலும், ஒரு தொகுதி முதியவர்கள் பல்வேறு விதமான உபாதைகளுடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் வேதனையையும் நாம் காண்கின்றோம்.
வயோதிபர்களின் அநாதரவான நிலைமைக்கு முதியோர் பராமரிப்பு இல்லங்கள் மாத்திரமே ஆதாரம் அல்ல. வீதியோரம் நடைபாதையில் இரவு பகலாக வாழ்கின்ற முதியோர்களும் இதற்கான ஆதாரம் ஆகும்.
எனவே முதியவர்கள் மீதான கரிசனை, பராமரிப்பு என்பவற்றையெல்லாம் அதிகரிக்க வேண்டிய தேவை இன்றுள்ளது. முதியவர்களின் உறவினர்கள், அரசாங்கம், பொதுநல நிறுவனங்கள் இவ்விடயத்தில் இனிமேல் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியிருக்கிறது.
முதுமைப் பருவத்தை அடைந்து விட்டனர் என்பதற்காக அவர்களை நிர்க்கதி நிலையில் தவிக்க விடுவதென்பது பெரும் சமூகக் குற்றம்!
எமது சமூகத்தின் சிரேஷ்ட பிரஜைகளாக போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள்.
இவை ஒருபுறமிருக்க, சிறுவர் நலன் சார்ந்த விடயங்களிலும் சிறுவர் தினமான இன்று விசேட கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கையில் இயற்றப்பட்டுள்ள சட்டவிதிகள் மிகவும் வலுவானவை ஆகும். சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றும் தவறாமல் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்; அவர்களது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற விதத்தில் எந்தவொரு குற்றமும் இழைக்கப்படலாகாது என்பதையெல்லாம் இச்சட்டவிதிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. சிறுவர்கள் மீதான குற்றங்களுக்கு எமது நாட்டின் நீதிமன்றங்கள் விதிக்கின்ற தண்டனைகளும் அதிகம்.
ஆனாலும் சட்டதிட்டங்களையெல்லாம் மீறி ஆங்காங்கே சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களும் நடந்தபடிதான் உள்ளன. கல்வி உட்பட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், பெற்றோரின் ஆதரவை இழத்தல், உடல் உள ரீதியில் கொடுமைகளுக்கு ஆளாதல் போன்ற துன்பங்களையெல்லாம் சிறார்கள் பலர் அனுபவித்து வருகின்றனர். தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதால் அவர்களது பிள்ளைகள் அனுபவிக்கின்ற துன்பங்கள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.
சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டதிட்டங்கள் வலுவாக உள்ள போதிலும், சிறுவர்கள் எதிர்கொள்கின்ற துன்பங்களும் தொடர்ந்தபடியே உள்ளன. இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும்.
முதியோர் தினமும் சிறுவர் தினமும் உலகில் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன. இவ்விரு பராயத்தினருக்கும் இன்றைய தினத்தில் எமது வாழ்த்துக்களும், ஆசிகளும் உரித்தாகட்டும்!