நானும் வடகொரிய அதிபர் கிம்மும் காதலில் விழுந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுடனும், அதன் அதிபர் கிம்முடனும் அமெரிக்கா நட்புறவில்தான் உள்ளது என்பதை தன்னுடைய சமீபத்திய பேச்சின் மூலம் ட்ரம்ப் உறுதி செய்திருக்கிறார்.
இதுகுறித்து வெர்ஜினியா மாகாணத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் பேசும்போது, ”நான் இதை உங்களிடம் கூறலாமா? நான் மிகவும் கடினமானவனாக இருந்தேன். அவரும் அவ்வாறே இருந்தார். எங்கள் நட்பு முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் காதலில் விழுந்திருக்கிறோம்.
அவருக்கு என்னைப் பிடித்திருக்கிறது. எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது. அவர் எனக்கு பல அழகான கடிதங்கள் எழுதியிருந்தார். அவை சிறந்த கடிதங்கள். அதன் பின் நாங்கள் காதலில் விழுந்தோம்” என்றார்.
நான் இவ்வாறு கூறுவதை கூட அமெரிக்க ஊடகங்கள், “உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிம்முடன் காதலில் விழுந்துவிட்டாராம். இது எவ்வளவு பயங்கரமானது” என்று செய்தி வெளியிடும் என்று கூறியிருந்தார்.
வடகொரியா- அமெரிக்கா மோதல்
முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.
வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
ஆனால், எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வந்ததது.
இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா – தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் – கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து வடகொரியா அதன் முக்கிய அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் நிரந்தரமாக அழிக்க ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.