நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வட மாகாணத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாக வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கடந்த வருடம் வட மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களில் 82 சதவீதமானவைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. ஆனால் இவ்வருடம் முதல் ஒன்பது மாதங்களுக்குள் 77 சதவீதமான குற்றச் செயல்கள் தொடர்பில் முடிவு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, வடமாகாணத்தில் குழுவாக வன்முறைகளில் ஈடுபட்டு வந்த 56 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் அதில் 42 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இராணுவத்தினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் இரண்டு நாட்களுக்குள் ‘ஆவா’ எனும் ஆயுதக் குழுவின் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர முடியுமென வட மாகாண கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே வடமாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் இவ்வாறு விளக்கம் அளித்தார்.
வட மாகாண கட்டளைத் தளபதியின் கூற்று பொலிஸாரால் ஆவா குழுவை கட்டுப்படுத்த இயலாதென அர்த்தப்பட மாட்டாது என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வடக்கில் 53 பொலிஸ் நிலையங்கள் உள்ளதாகவும் அதில் யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களிலேயே குழு வன்முறைகள் முறைப்பாடாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
‘ஆவா’ குழு காரணமாக இதுவரை எந்தவொரு கொலையும் இடம்பெறவில்லையென ஆணித்தரமாக கூறிய பிரதி பொலிஸ் மா அதிபர் பெர்ணான்டோ, ஆவா குழுவிலிருந்து பிரிந்து சென்று ‘தனு ரொக்’ எனும் குழு தனித்து இயங்குவதாகவும் இக்குழுக்களுக்கிடையிலேயே தற்போது அடிதடி பிரச்சினைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இக்குழுக்கள் வடக்கிலுள்ள மக்களை அச்சுறுத்துவதாக வெளிவந்திருக்கும் செய்திகளை முற்றாக மறுத்த அவர், இக்குழுக்கள் தங்களுக்கிடையிலேயே மோதி கொள்வதாகவும் இதனால் மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென்றும் கூறினார்.
இதேவேளை, சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமே வடக்கில் இடம்பெற்ற மிகப் பெரிய கொள்ளைச் சம்பவமாகக் கருதப்பட்டபோதிலும் அந்தச் சம்பவம் தீர்க்கப்பட்டிருக்கிறது.
சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். உடனடியாக இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டதால், அதுபற்றிய உண்மை நிலவரத்தைக் கண்டறிய முடிந்தது. குறிப்பிட்ட நிதி நிறுவனத்தின் காசாளரே ஒரு சிலரின் உதவியுடன் அந்தக் கொள்ளையைத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், வடக்கில் போதைப்பொருள் நடவடிக்ைககளைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், வடக்கில் இவ்வாறான சம்பவங்களைப் பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதால், அதுபற்றி அலட்டிக்ெகாள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், வடக்கில் உள்ள பொதுமக்களுக்கோ வடக்கிற்கோ வருகை தருபவர்களுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறினார்.