இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 1000க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்திலுள்ள மவுண்ட் சோபுடன் எரிமலை இன்று (செவ்வாய்க்கிழமை) காலையுடன் வெடிக்கத் தொடங்கியது.
இதுகுறித்து இந்தோனேசிய அறிவியலாளர்கள் தரப்பில், “கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்த எரிமலை வெடிப்பைத் தூண்டி விட்டிருக்கலாம். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே அதன் நடவடிக்கைகள் வெடிக்கும் வண்ணம் இருந்தன” என்று கூறியுள்ளனர்.
மவுண்ட் சோபுடன் வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.
இந்தோனேசியாவைப் பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் 130 எரிமலைகள் உள்ளன.
முன்னதாக, இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமியும் தாக்கியது. இதனால் பலு நகரில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,200-ஐத் தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.