வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தை கல்லூரியாக தரமுயர்த்த வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியரிடையே பேசும்போது பாடசாலை அதிபர் செல்வி. ஆர். சுப்பிரமணியகுருக்கள் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக மகாவித்தியாலய தரத்திலேயே இருக்கும் இப்பாடசாலையை யாழ். குடாநாட்டில் இருக்கும் பெண்கள் கல்லூரிகள் போல தரமுயர்த்தும் திட்டங்களை அத்தருணம் முன்வைத்தார்.
ஒரு பாடசாலை கல்லூரியாக தரமுயர வேண்டுமானால் அதற்கு என்னென்ன நியமங்கள் கோரப்படுகின்றன என்பதையும், தாம் அடைய வேண்டிய இலக்குகளையும் பெற்றோருக்கு விளக்கினார்.
அத்தருணம் சுமார் 200 வரையான பெற்றோர் கலந்து கொண்டு அதிபரின் புதிய யோசனைகளுக்கு ஆதரவு வழங்கினார்கள்.
அதிபர் ஏழு அபிவிருத்தி முயற்சிகளை அங்கு பட்டியலிட்டுப் பேசினார். அதில் ஒன்று சர்வதேச தரத்திலான வகுப்பறை ஒன்றை அமைப்பதுமாகும்.
அனைத்து விதமான நவீன கற்பித்தல் உபகரணங்களையும் கொண்டு சர்வதேச நாடுகளில் உள்ளதைப் போன்ற வகுப்பறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
இன்றய ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பாடசாலைகள் எத்தகைய வகுப்பறைகளை வைத்துள்ளனவோ அது போல இங்கும் ஒரு வகுப்பறையை அமைத்தல் வேண்டும்.
முழுப் பாடசாலையையும் அவ்வாறு ஐரோப்பிய தரத்தில் மாற்றுவது சாத்தியமல்ல ஆனால் நமது நாட்டு வளங்களுக்கு அமைவாக ஒரு வகுப்பறையை ஆவது நாம் எட்டித் தொட வேண்டும்.
இணையம், வாட்ஸ் ஆப், வைப்பர், இன்ஸ்ரகிராம் ஒளிப்பட கலவை, வர்ணச் சேர்க்கை, யூருப் காணொளிகளை கல்விக்கு பயன்படுத்தல், எறி கருவிகள், பல இடங்களில் தொடர்பு கொள்ளும் வீடியோ கொன்பரன்ஸ் என்று மேலை நாடுகள் அபார முன்னேற்றமடைந்துவிட்டன.
அந்த இலக்குகளை நாமும் பின்பற்ற வேண்டும், அதற்கு முதலில் அதை மாணவர்களுக்கு அறியத்தர வேண்டும் இப்படி பல இலக்குகள் உள்ளன.
அத்தகைய வகுப்பறை ஒன்று இருந்தால் மாணவர்கள் வளர்ந்த நாடுகளில் உள்ள மாணவர்கள் பாவிக்கும் கருவிகளையும், கல்வி முறைமைகளையும் தாமும் அறிந்து கொள்ள முடியும். உயர் கல்விக்கு செல்லும் மாணவிகள் இங்கு அந்த வசதிகள் இல்லாமையால் வேறு பாடசாலைகளை நாடிச் செல்கிறார்கள்.
ஆகவே அதை உருவாக்க வேண்டும். அதற்கு இன்றுள்ள நிலையில் நாம் புலம் பெயர்ந்த மக்களையே எதிர்பார்த்து நிற்கிறோம் என்றார்.
இந்த நிகழ்வில் டென்மார்க்கில் இருந்து மகளிர் மகாவித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியர் திரு. கி. செல்லத்துரையும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் குடாநாட்டில் மிகச்சிறந்த சர்வதேச வகுப்பறை இங்கு இருத்தல் வேண்டும் என்ற இலக்கை வைத்து இன்றே பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார். அவர் மேலும் கூறும்போது,
வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவிகளை நான் உலகின் பல பாகங்களிலும் கண்டுள்ளேன். நான் இயக்கும் திரைப்படங்கள், எழுத்து, கலை, சமுதாய முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு இக்கல்;லூரியின் பழைய மாணவிகள் என்றும் தோள் கொடுப்பதை பார்த்துள்ளேன்.
பெண்கள் குடும்பத்தில் சக்தியாக இருக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு மிகச்சிறந்த புதுமை கலந்த நவீன கல்வி அறிவு வேண்டும். அப்போதுதான் குடும்பத்தையும், பிள்ளைகளையும் அவர்கள் நல்லபடியாக உருவாக்கி இந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்ற முடியும்.
இன்றுள்ள காலத்திற்கேற்ப அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் பின்தங்கிவிட்டால் அதற்கு பெரிய விலை கொடுக்க நேரிடும்.
அந்த வகையில் வல்வை மகளிர் மகாவித்தியாலயம் கடந்த காலங்களில் சிறந்த பதவி வகிக்கும் நிர்வாக திறமை மிக்க பல பெண்களை உருவாக்கியிருக்கிறது. இன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகக்கூட இந்தப் பாடசாலை மாணவிகள் திகழ்கிறார்கள்.
இதுவரை கடந்து போன நாட்:கள் நமது வளர்ச்சியில் ஒரு கட்டம், இனி அடுத்த கட்டத்திற்குள் நுழைய வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆகவே உலகம் முழுவதும் இருக்கும் வல்வை நலன்புரி சங்கங்கள், வல்வை ஒன்றியங்கள், பாடசாலையின் பழைய மாணவிகள் இணைந்து இப்பணியை முன்னெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதையும் இந்த நாள் உணர்த்துகிறது.
நாளை இப்பாடசாலை வல்வை மகளிர் கல்லூரியாக மிளிர வேண்டும் அதற்கான நவீன வகுப்பறையை அமைக்கும் பணியை உலகின் பல பாகங்களில் இருந்தும் வல்வை நலன்புரிச் சங்கங்கள் முன்னெடுக்கும் வழி செய்வோம் என்றும் கூறினார்.
பெற்றோரின் சார்பில் இந்தத் திட்டங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்பட வேண்டுமென வழி மொழியப்பட்டது.
அலைகள் 04.10.2018