தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தன் மௌனம் காப்பதனால் நன்மை ஏற்படுமென்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீங்கள் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளின் பின்னர், உங்கள் கட்சியின் தலைவர் மௌனம் சாதிக்கின்றார். கட்சி தலைவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 07 ஆம் திகதி சந்திப்பதாக கூறியிருந்தார். ஆனால் இந்தியா சென்றுவிட்டதனால் சந்திக்க முடியவில்லை.
மீண்டும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா என கேட்ட போது, தலைவர் சம்பந்தனை சந்திப்பதற்கான அவசியம் எனக்கு இருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியில் யார் தீர்மானங்கள் எடுப்பவராக இருக்கின்றாரோ அவரின் தீர்மானங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டன. தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் மௌனம் காப்பதனால், நன்மைகள் ஏற்படுமென்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட நேரத்தில் தலைவர் சம்பந்தன் தானே உங்களுக்கு ஆதரவாக இருந்தார் என மீண்டும் ஊடகவியலாளார் கேள்விக்கு, பொது மக்கள் கொடுத்த அழுத்தங்களின் பின்னர், நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதனால், நடவடிக்கை எடுத்தார் என்றும் சுட்டிக் காட்டினார்.