பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. அன்றைய நாளே அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் அந்த தீர்மானத்தில் கையெழுத்திடாததால், எழுவர் விடுதலை காலதாமதமாவதாக விமர்சனம் எழுந்தது. மேலும், தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி ஆளுநர் கருத்து கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை ஆளுநர் மாளிகை தரப்பு மறுத்தது. மேலும், இந்த விவகாரத்தில் தெளிவாகவும், வெளிப்படையாகவும் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, ராஜீவ்காந்தி கொலையின்போது உயிரிழந்த 2 பேரின் உறவினரான எஸ்.அப்பாஸ், ஜான் ஜோசப் ஆகியோர், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
சமீபத்தில், ராஜீவ்காந்தி கொலையின்போது உயிரிழந்த 15 பேரின் உறவினர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதையடுத்து, தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஆளுநர் ஒப்புக்கொண்டதாகவும் உறவினர்களில் சிலர் தெரிவித்தனர். அவர்களது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக ஆளுநர் கருதுவதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ராஜீவ்காந்தி கொலையின்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டில், எழுவர் விடுதலையை பரிந்துரைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனால், அந்த மனுவில் திருத்தம் செய்து, தமிழக அமைச்சரவையின் தற்போதைய தீர்மானத்தையும் இணைக்குமாறு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் மாத நடுவில் பரிந்துரைத்தது.
உறவினர்கள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அமெரிக்கை வி.நாராயணனும் இவர்களது விடுதலையை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். அவர்கள் மனுக்களை திருத்தம் செய்ய 4 வார அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் ஆளுநரை சந்தித்து, தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுற்றுத்தினார்.
இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை
உறவினர்களின் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இன்னும் ஆளுநர் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் உள்ள பல்வேறு சட்ட, நிர்வாக, அரசியல் பிரச்சினைகளை ஆலோசித்து ஆளுநர் முடிவெடுப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுகுறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, ஆளுநர் இரு முக்கிய பிரச்சினைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
“தமிழக அமைச்சரவை பரிந்துரைத்தாலும், ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சட்ட ஆலோசனை கேட்கலாம். அவர் அந்த ஆலோசனைகளை அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதே சமயத்தில், அவருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்பதாலேயே உடனடியாக முடிவெடுக்காமல், உறவினர்கள் மனுக்கள் மீதான உச்ச நீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கலாம்”என்றார்.