தமிழில் தயாராகியிருக்கும் முதல் விண்வெளி படம். “டிக் டிக் டிக்” ஆகாயத்தில் இருந்து ஒரு விண்கல் பூமியில் விழுந்து நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது படத்தின் சினிமா விமர்சனம்.
ஆகாயத்தில் இருந்து ஒரு விண்கல் பூமியில் விழுந்து நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது. அதேபோன்ற மற்றொரு விண்கல்லும் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், நிவேதா பெத்துராஜ், ரித்திகா சீனிவாஸ் ஆகியோரை கொண்ட விஞ்ஞானிகள் குழு கண்டுபிடிக்கிறார்கள்.
அந்த விண்கல் இரண்டு நாட்களில் பூமியை தாக்கும் என்ற நிலையில், அப்படி தாக்கினால் 4 கோடி பேர் உயிர் இழப்பார்கள் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள். எனவே அதை விண்வெளியிலேயே தகர்த்து அந்த 4 கோடி பேர்களையும் பாதுகாப்பது என்ற முடிவுக்கு வருகிறார்கள், விஞ்ஞானிகள்.
விண்கல்லை தகர்க்கும் அணு ஆயுதம் ஒரு அன்னிய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது. அதை திருடுவதற்கு ஒரு பலே ஆசாமியை தேடுகிறார்கள். அந்த ஆசாமிதான் ஜெயம் ரவி. மனைவியை இழந்த அவருக்கு ஒரே மகன். அவன் மீது இவருக்கு உயிர். சிறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட அவருக்கும், விண்வெளி வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயம் ரவிக்கு ஒரு மிரட்டல் போன் வருகிறது. “உன் மகன் இப்போது என் கையில்…அவன் உயிரோடு வேண்டும் என்றால் விண்கல்லை தகர்க்கும் ஆயுதத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று ஒருவன் மிரட்டுகிறான். “எனக்கு என் மகன்தான் முக்கியம்” என்று மிரட்டல் ஆசாமியின் பயமுறுத்தலுக்கு ஜெயம் ரவி பணிகிறார். அதன்படி, விண்வெளியில் பறக்கும் ராக்கெட்டை பழுதடைய வைக்கிறார்.
அவருடன் சென்ற கேப்டன் வின்சென்ட் அசோகனும், வீராங்கனை நிவேதா பெத்துராஜ் மற்றும் வீரர்கள் என்ன ஆனார்கள்? விண்கல் பூமியை தாக்கியதா, ஜெயம் ரவியின் மகன் என்ன ஆகிறான் என்பது மீதிக் கதை.
வழக்கமான கதாபாத்திரமாக இல்லாமல், ஆங்கில பட சாயலில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி. மகன் மீது அவர் கொண்ட பாசமும், அதனால் கடத்தல்காரனின் மிரட்டலுக்கு அவர் பணிவதுமாக ஜெயம் ரவியின் கதாபாத்திரம் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது. ராக்கெட்டுக்குள் அவருக்கும், எதிரி நாட்டு வீரர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை காட்சி, வியக்க வைக்கிறது. மகன் மீது அவர் வைத்துள்ள பாசம், நெகிழவைக்கிறது.
படத்தின் இறுதியில், இப்படி செய்து விட்டாரே என்று படம் பார்ப்பவர்களை ஆதங்கப்பட வைத்து, முடிவில் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார், ஜெயம் ரவி. படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. நிவேதா பெத்துராஜ் விண்வெளி வீராங்கனையாக வருகிறார். காதல், மோதல் என எதுவும் இல்லாத நாயகியாக சும்மா வந்து போகிறார்.
இவர்களின் கேப்டனாக வின்சென்ட் அசோகன், அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு அத்தனையிலும் கம்பீரம். கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்து இருக்கிறார்.
எஸ்.வெங்கடேசின் ஒளிப்பதிவும், டி.இமானின் பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. ஷக்தி சவுந்தர் ராஜன் டைரக்டு செய்து இருக்கிறார். ஜெயம் ரவி எதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்? ராக்கெட்டுக்குள் அவ்வளவு சுலபத்தில் கோளாறு செய்ய முடியுமா போன்ற பல கேள்விகளை எழுப்புகிறது, கதை. இருப்பினும், முதல் விண்வெளி கதையை ஆங்கில படங்களுக்கு நிகராக படமாக்கியதற்காக பாராட்டுகள்.