‘பர்மா,’ ‘ஜாக்சன் துரை’ படங்களை இயக்கிய தரணிதரன் தற்போது, ‘ராஜா ரங்குஸ்கி’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.‘மெட்ரோ’ பட புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.
போலீஸ்காரர் சிரிஷ், ரோந்து பணியில் ஒரு வில்லாவில் வசிக்கும் வயதான அனுபமா குமாரிடம் கையெழுத்து பெற்று செல்கிறார். அதே வளாகத்தில் இருக்கும் சாந்தினி மீது சிரிஷுக்கு காதல். சாந்தினியும் சிரிஷை விரும்ப அனுபமா உதவுகிறார். அப்போது சாந்தினியை கொல்லப் போவதாக போனில் ஒருவன் மிரட்டுகிறான்.
அவரை காப்பாற்ற வில்லாவுக்கு ஓடுகிறார் சிரிஷ். அங்கு சாந்தினிக்கு ஆபத்து இல்லை. ஆனால் அனுபமா கொல்லப்பட்டு கிடக்கிறார். போலீஸ் சந்தேகம் சிரிஷ் பக்கம் திரும்புகிறது. அனுபமா வீட்டில் திருட்டுப்போன பணத்தை சிரிஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றுகின்றனர்.
தன்னை கொலை சதியில் சிக்க வைத்தவனை சிரிஷ் தேடுகிறார். அப்போது இவர் சந்தேகிக்கும் நபர்களும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு அந்த பழியும் சிரிஷ் தலையில் விழுகிறது. கொலையாளி யார்? என்பதும் கொலைக்கான பின்னணி என்ன என்பதும் மீதி கதை.
போலீஸ்காரராக வரும் சிரிஷ் திகில் கதையில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சாந்தினி அழகில் மயங்குவதும் வேறு குரலில் பேசி அவரை காதல் வயப்படுத்துவதும் சுவாரஸ்யம். மர்ம போன் அழைப்பில் அமைதி இழந்து தவிப்பு காட்டுகிறார். கொலையாளியை தேடிச்செல்வதிலும் தொடர் கொலைகளிலும் பதற்றம் பயம் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார். .
கிளைமாக்சில் கண்ணீர் துளிகளில் காதல் வலியை சொல்வதில் அழுத்தம். விழிகளால் வசீகரிக்கும் நந்தினிக்கு வலுவான கதாபாத்திரம் அதை சிறப்பாக செய்துள்ளார். வினோத் சிரிக்க வைக்கிறார். சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக வரும் ஜெயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் விஜய் சத்யாவும் கதாபாத்திரங்களில் வலு சேர்த்துள்ளனர். அனுபமா சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக வேகம். வில்லாவில் நடக்கும் ஒரு கொலையை யூகிக்க முடியாத தொடர் முடிச்சுகளால் விறுவிறுப்பாக நகர்த்தி தேர்ந்த இயக்குனராக கவனம் பெற்றுள்ளார் இயக்குனர் தரணிதரன். கிளைமாக்ஸ் எதிர்பாராத அதிர்ச்சி. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம். யுவாவின் கேமரா வில்லா திகிலை கண்களில் பதிக்கிறது.