இந்திய திருமணங்களில் பொதுவாக பெண்ணைவிட ஆணுக்கு வயது சற்று அதிகமிருக்கும். சினிமா நட்சத்திரங்களின் நிஜ திருமணங்களில் பெண்ணைவிட ஆணுக்கு வயது ரொம்ப அதிகமாக இருக்கும்.
இந்திய திருமணங்களில் பொதுவாக பெண்ணைவிட ஆணுக்கு வயது சற்று அதிகமிருக்கும். சினிமா நட்சத்திரங்களின் நிஜ திருமணங்களில் பெண்ணைவிட ஆணுக்கு வயது ரொம்ப அதிகமாக இருக்கும். அந்த பழைய வழக்கங்களை எல்லாம் முறியடிக்கும் முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறார், பிரியங்கா சோப்ரா. முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான இவர், அமெரிக்க தொடரிலும் நடித்து புகழ் பெற்றவர். இவரது வாழ்க்கையில் இணையப் போகிற வரும் அமெரிக்க இளைஞர்தான். அவருக்கு வயது 25. பெயர் நிக் ஜோனஸ். பிரியங்கா சோப்ரா இப்போது முதிர்கன்னி வரிசையில் இருக்கிறார், வயது 36.
‘தன்னைவிட 11 வயது சின்னவராக இருந்தாலும், பாசம் அதிகம் கொண்டவர் நிக்’ என்று பிரியங்கா காதல் புகழ் பாடுகிறார். இவர்கள் காதல் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த ‘மெட்கலா’ என்ற ஷோவில் இருவரும் கைகோர்த்துக்கொண்டு பங்குபெற்றார்கள். பலரது பார்வையும் அவர்களை ேநாக்கித் திரும்ப, “எங்கள் இரு வருக்கும் ரால்ப் லோரல் என்ற ஒரே டிசைனர், உடை வடிவமைத்திருந்தார். அதனால்தான் நாங்கள் இருவரும் ஒன்றாக கைகோர்த்து வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஒன்றாக வந்ததற்கு அதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை” என்று பிரியங்கா விளக்கமளித்தார்.
அடுத்து சில மாதங்கள் கழித்து காதல் வானில் சிற கடித்துக்கொண்டிருந்தபோது நிக்கிடம், பிரியங்காவுடனான காதல் பற்றி கேட்டபோது, “ஒரு நண்பர் வழியாக நாங்கள் இருவரும் அறிமுகமானோம். எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்றார். இனி இதுபோன்ற கேள்விகளுக்கு இடமில்லை. ஏனென்றால் 25-க்கும் 36-க்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அடுத்து திருமணம்தான். அதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. ‘முறைப்படி நீங்கள் வந்து பெண் கேட்கவேண்டும்’ என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போல் தெரிகிறது. அதற்கும் சரி சொல்லிவிட்ட நிக்கின் பெற்றோர், விரைவில் மும்பை வந்து பிரியங்காவின் பெற்றோரிடம் பேச இருக்கிறார்களாம்.
வயது குறைந்தவரை அதிரடியாக திருமணம் செய்வதுபோல் பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையும் அதிரடி நிறைந்தவைதான். ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு பைலட் ஆகவேண்டும் என்ற ஆசையில் இருந்த அவரை, திடீரென்று மாடலிங் உலகம் ஈர்த்தது. 18 வயதில் 2000-ம் ஆண்டு லண்டனில் நடந்த உலக அழகிப் ேபாட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று, வெற்றியும் பெற்றார். அதன் மூலம் பிரியங்கா, இ்ந்தியாவில் உலக அழகிப் பட்டத்தை வென்ற ஐந்தாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். அதன் பின்பு அவரை திரை உலகம் இருகரம் கூப்பி வரவேற்றது. நடிகர் விஜய்யுடன் ‘தமிழன்’ சினிமாவில் நடித்தார். இந்தியில் கொடிகட்டி பறந்தார். பேஷன் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். அடுத்து பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது என்று புகழ் பட்டியல் நீண்டது.
அமெரிக்க டெலிவிஷன் தொடரான குவாண்டிகோ அவரை சர்வதேச பிரபலமாக்கியது. அடுத்து ஹாலிவுட் படங்களிலும் நடித்தார். இவரது தாயும், தந்தையும் ராணுவத்தில் டாக்டர்களாக பணியாற்றியவர்கள். அதனால் சிறுவயதிலே பல்வேறு நாடுகளில் இவர் வசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. 13 வயதில் அமெரிக்காவில் பள்ளிப் படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தபோது இவரது உடல் அமைப்பை குறிப்பிட்டு பலர் கேலி செய்திருக்கிறார்கள். குறிப்பாக அவரது காலில் இருந்த தழும்புகளை பார்த்துவிட்டு கிண்டலடித் திருக்கிறார்கள். அதே உடலை பின்பு உலகப் புகழ்பெற்ற பிராண்டுகள் தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்த முன்வந்தன. பிரியங்கா 12 சர்வதேச பிராண்டுகளின் விளம்பரத்தில் பங்கேற்று, கோடிகளை சம்பாதித்தார்.
புகழின் உச்சியில் இருக்கும் அவரிடம், ‘உங்கள் வாழ்க்கை அதிரடியானதாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் அந்த புத்தகத்திற்கு என்ன பெயர் சூட்டுவீர்கள்?’ என்று கேட்டபோது, அவர் அளித்த பதில், “அபூர்வம்”.
ம்.. உண்மைதான்.. பிரியங்கா சோப்ரா அபூர்வமானவர்தான்!