கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விஜயகலா மகேஷ்வரனை ஆஜர்படுத்திய போது, அவரை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளதோடு, குறித்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஷ்வரன் இன்று (08) காலை கைது செய்யப்பட்டார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்ற போதே பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் வாக்குமூலம் ஒன்றை வழங்கச் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.