டென்மார்க்கில் உள்ள மக்களிடையே பாவித்த பொருட்களை வாங்கும் பழக்கம் ஒரு புதிய கலையாக உயர்ந்து வருவதாக இன்றைய காலை பொருளாதார செய்தி தெரிவிக்கிறது.
கடந்த 12 மாதங்களில் 7.2 பில்லியன் குறோணர்களுக்கு பாவித்த பொருட்கள் விற்பனையாகியுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு பெரிய விற்பனையாகும்.
பாவித்த பொருட்களை விற்கும் கடைகள், வீதிகள் தோறும் அவ்வப்போது போடப்படும் லொப்ப மாக்கற் எனப்படும் ஒரு நாளைக்கான பாவித்த பொருட்களின் விற்பனை சந்தைகள் என்பன இந்த விற்பனையில் முக்கியம் பிடிக்கின்றன.
டேனிஸ் மக்களிடையே பாவித்த பொருட்களை வாங்கும் பழக்கம் 2016 ல் 59 வீதமாகவும் 2017 ல் 63 வீதமாகவும் 2018ல் 68 வீதமாகவும் உயர்வு கண்டுள்ளது.
இன்றுள்ள நிலையில் ஒவ்வொரு மூன்று டேனிஸ்காரருக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் பாவித்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் கொண்டுள்ளனர்.
உடைகள், விளையாட்டு பொருட்கள், கைத்தொலைபேசிகள் உள்ளிட இலத்திரனியல் பொருட்கள் என்று பலதரப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.
ஒவ்வொரு தடவையும் புதிய புதிய கைத்தொலைபேசிகள் வர வர பழையவை விரைவாக கடைகளுக்கு வருகின்றன. இதனால் பழைய பொருட்களின் தொகையும் பெருகுகிறது.
இதனால் பொருட்கள் நல்ல முறையில் பாவனையாகின்றன, குடும்பப் பொருளாதாரம் வீண் விரயமாகாமல் தடுக்கப்படுகிறது. இவ்வாறு மீதம் பிடிக்கும் பணத்தில் தரமான உணவுப் பொருட்களை வாங்கி ஆரோக்கிய வாழ்வுக்கு வழி சமைக்கிறேன் என்கிறார் ஒரு தாய்.
அதேவேளை உள்ளாடைகளை தான் புதிதாகவே வாங்குகிறேன் என்றும் கூறுகிறார்.
பழைய பொருட்களை விளம்பரம் செய்யும் புளோ அவிஸ் என்ற பத்திரிகையில் விளம்பரம் தருவோரால் வரும் வருமானமானது 10 மில்லியன் குறோணரில் இருந்து 20 மில்லியன் குறோணர்களாக அதிகரித்துவிட்டதாக அந்த விளம்பரப்பத்திரிகை மகிழ்வுடன் கூறுகிறது.
டென்மார்க்கில் 2008 ல் வந்த பொருளாதார மந்தம் இப்போது விலகிவிட்டாலும் கூட பழைய பொருட்களை வாங்கி மீதம் பிடிக்கும் பழக்கம் என்னவோ நல்லபடியாக தொடர்கிறது.
நேற்று வாங்கிய பொருள் இன்று பழையது.. ஆகவே என்றும் புதியதாக எதுவும் இல்லை என்பது இவர்களில் சிலரது கருத்து.
இந்த எண்ணம் ஒரு தனித்துவமான எண்ணமாக இருக்கிறதல்வா..?
டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் உள்ள பழைய பொருட்கள் விற்கும் கடையில் சீர்காழி கோவிந்தராஜனின் பழைய இசைத்தட்டுக்கள் காணப்படுகின்றன. யாரோ ஒரு டேனிஸ்காரர் கொடுத்ததாக கூறுகிறார்கள்.
ஒரு விழாவுக்கு கட்டிய சேலையை இன்னொரு விழாவுக்கு கட்டுவதில்லை என்ற புலம் பெயர் தமிழ் கலாச்சாரம் கொஞ்சம் சிந்திக்குமா..?
அலைகள் 09.10.2018