நேற்று முன்தினம் வெளியான ஐ.நா காலநிலைப் பிரிவின் அறிக்கை புவியை மனிதர்கள் வெப்பமாக்கும் அளவு கூடிவிட்டதாக எச்சரித்திருந்தது. புவி சூடாகும் வேகமானது கடந்த 2015 பாரீஸ் பருவநிலை மாநாட்டு தீர்மானத்தை மீறிய வேகமாக இருப்பதாக அது அறிவித்ததும் தெரிந்ததே.
இந்த பிரகடனத்தை மதித்து டென்மார்க் தன்னளவில் புதிய யோசனைகளை இன்று பகல் 10.30 மணிக்கு முன்வைக்கிறது.
இதன்படி டீசல், பெற்றோல் கார்களின் காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. இவற்றுக்கு பதிலாக மின்சாரத்தில் ஓடும் கார்கள் முக்கிய இடம் பிடிக்க இருக்கின்றன.
எதிர்வரும் 2030 உடன் புதிதாக பெற்றோல் டீசல் கார்களை விற்கும் முறை நிறுத்தப்படுகிறது. 2025 ற்கு பின் வாடகைக்கார், பேருந்து போன்றன பெற்றோல் டீசலில் ஓடுவனவாக இருந்தால் அரசில் பதிவு செய்ய முடியாது.
நான்கு இலட்சத்திற்கு குறைந்த மின்சார வாகனங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரிச்சலுகை, மேலும் பசுமை வாகனங்களுக்கு 30.000 குறோணர் வரை சிறப்பு வரிச்சலுகை என்பன வழங்கப்படுகின்றன.
இது குறித்த சரியான விபரம் இன்று பகல் வெளியாகும்.
இப்போது டென்மார்க்கின் நெரிசல் கூடிய பாரிய நகரங்களில் பேருந்துகள் ஓடுவதற்கான சிறப்பு வழிகள் உண்டு. இந்த வழியால் மற்றைய வாகனங்கள் போக முடியாது. ஆனால் உங்கள் கார் மின்சாரத்தில் ஓடும் காராக இருந்தால் இந்த வழியே ஓட சிறப்பு சலுகை உண்டு என்றும் அறிவிக்க இருக்கிறது.
இவை எப்போது அமலுக்கு வரும் அதற்கும் சில மணி நேரம் பொறுக்க வேண்டும்.
பெற்றோல் டீசல் கார்கள் பாவனையை முடிப்பதால் அரசுக்கு வரும் வருமானத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். ஆனாலும் புவியை வெப்பமாக்காதிருப்பது அதைவிட முக்கியம் என்று அமைச்சர் கூறுகிறார்.
வரும் 2030 ல் டென்மார்க் வீதிகளில் ஒரு மில்லியன் மின்சார வண்டிகள் ஓடும் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு நாட்டை வெப்பமாக்காத பசுமை முயற்சிகள் சகல தரப்பிலும் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
கார்கள் மின்சாரத்தில் ஓடினால் பெற்றோல், டீசலால் பணக்கார நாடுகளாக இருந்த மத்திய கிழக்கின் எதிர்காலம் என்ன.. இப்போது எரிந்து கொண்டிருப்பதற்கு இந்த மாற்றமா காரணம்..?
நீராவியும் நிலக்கரியும் முதன்மை இழந்தது போல பெற்றோல், டீசல் முதன்மை இழக்கப் போகின்றன.
மத்திய கிழக்கு புதிய ஏழைகளாக மாறுமா..? இல்லை பெற்றோல், டீசல் புதிய மூலப்பொருட்களாக மாறுமா..?
இந்த மாற்றத்தால் அதிசயமிக்க புதிய வரலாறு ஒன்று வெளிவருமா..? காத்திருக்கிறது அறிவியல் உலகம்.
அலைகள் 09.10.2018 செவ்வாய்