டென்மார்க்கில் நீண்ட காலமாக தமிழ் ஆசிரியையாக இருந்து வருபவர் சிறந்த கலைஞர் விருது பெற்ற தமிழ் ஆசிரியை திருமதி சிவகலை தில்லைநாதன் அவர்களாகும்.
தமிழ் மொழி மட்டுமல்லாமல் சமயம், நாடகங்கள், பட்டிமன்றங்கள், நடனம் என்று தனது மாணவர்களை சகல துறைகளிலும் தரமிக்கவர்களாக உருவாக்க கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக டென்மார்க் நாட்டில் அரும் பாடுபட்டு வரும் ஆசிரிய திலகம்.
சிறப்பாக டென்மார்க் பரடைசியா நகரில் இவருடைய தமிழ் வகுப்புக்கள் நடைபெற்று வந்தன, ஏராளம் விழாக்களை நடத்தி நாடகங்களை வழங்கியவர். தமிழ் மொழி வளர்ச்சிக்கும் உரையாடல் சிறப்பிற்கும் நாடகங்கள் மிக முக்கியம் என்ற அவருடைய கருத்து பல வெற்றி மாணவர்களை உருவாக்கியிருக்கிறது.
புலம் பெயர் நாடொன்றில் தாயகம் போல பிள்ளைகள் வாயில் சிறந்த தமிழ் மொழி தங்கு தடையின்றி முழங்கிக் கொண்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணமான ஒருவர் ஆசிரியை சிவகலை என்றால் அது மிகைக்கூற்றல்ல.
தற்போது அவரால் நடத்தப்பட்டு வரும் டென்மார்க் பரடைசியா கவின் கலைத் தமிழ் மாணவர்கள் அரங்கம் இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ் நாடக விழாவில் பங்கேற்று பராட்டுப் பெற்று, நாடக வாழ்வின் முக்கியமான வெற்றியுடன் திரும்பி டென்மார்க் வாழ் நாடகக் கலைஞர்களுக்கு பெருமை தேடித்தந்துள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகரும், நாடக கூத்து பாரம்பரியத்தில் இருந்து வந்தவருமான நாஸர் பங்கேற்றிருந்தார்.
நிகழ்ச்சியை உடல் அரங்கியல் இதழாசிரியர் பிரான்சில் உள்ள முனைவர் திரு. அரியநாயகம் மனுவல்பிள்ளை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
சிறந்த நாடகங்கள், நாடகக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் டென்மார்க் கலைஞர்களின் முயற்சியை நடிகர் நாஸர் வெகுவாக பாராட்டியதோடு கலைஞர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்ததும் மறக்க முடியாத நிகழ்வாகும்.
சுமார் 30 வருடங்களாக நாடகத்துறையில் அரும்பாடுபட்டு உழைத்து வரும் திருமதி சிவகலை தில்லைநாதன் அவர்களுடைய நாடக வாழ்விலும் அவர்தம் மாணவர் கலைப்பயணத்திலும் இந்த நாள் ஒரு பொன்னான நாள் என்பதை மறுக்கத்தான் முடியுமா.
மகாராணி என்ற தலைப்பில் வேலு நாச்சியார் கதையை அரங்கப்படுத்தியிருந்தனர். நாடக தயாரிப்பு, ஒப்பனை, வழங்கிய விதம், பேசிய மொழி, அங்க அசைவு, கதைக்கருவை ரசிகருக்கு புரிய வைத்த நேர்த்தி, கூர்மையான வாளை ஏந்தியது மட்டுமல்ல அதைப்போல எடுத்த கதையை கூர்மையாக கொடுத்த சிறப்பும் அரங்கில் பெரும் வரவேற்பை பெற்றன.
இத்தகைய நாடக முயற்சியை உவந்து முன்னெடுக்கும் பிரான்ஸ் கலைஞர் திரு. அரியநாயகம் மனுவல்பிள்ளை அவர்களும் முன்னெடுத்துள்ள பணி பெரிதும் பாராட்டுக்குரியதாகும்.
பொய்க்கால் குதிரையாட்டத்துடன் கலைஞர்கள் இங்கிலாந்தில் அழைத்துவரப்பட்டதை எவ்வளவும் பாராட்டலாம் என்கிறார்கள் பலர்.
இத்தகைய ஒரு திருநாளுக்கே காத்திருந்தேன் என்று கூறியபோது ஆசிரியையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
பக்கத்து தெருவிலேயே நாடகம் போட முடியாமல் சினிமா பாடலை போட்டுவிட்டு ஆடுவதல்லாது வேறொன்றறியாத அவலமான நிலைக்கு தமிழ் கலைகள் போய்க் கொண்டிருக்க நாடகத்தை தயாரித்து, ஒத்திகை பார்த்து அதை இங்கிலாந்து கொண்டு சென்று அரங்கேற்றி திரும்புவதென்றால் இன்றைய பரபரப்பு வாழ்வில் ஆசிரியை சிவகலை தில்லைநாதனை விட்டால் வேறு யாராவது இருப்பார்களா என்பது ஒரு மில்லியன் குறோணர் பரிசுக்குரிய கேள்வியாகத்தான் இருக்குமோ..?
அலைகள் 11.10.2018 வியாழன்