இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளுக்கும் , ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த இறுதிக்கட்டப் போரில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்த இறுதிக்கட்டப் போரில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பார்கள் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.
இலங்கையில் போரில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தருவதும், போரின் போது உடைமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு தருவதும் சர்வதேச சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த நிலையில் இப்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழீழம் கேட்டு விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். இதில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கப்பட்டப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். இந்தப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணவில்லை.
இந்நிலையில், காணாமல் போனோர், பலியானார் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி சர்வதேச சமூகத்தினரும், மனித உரிமைகள் அமைப்பும் வலியுறுத்தி வந்தன. இந்தச் சூழலில் போரில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்கும் இழப்பீடு மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நேற்று நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 59 வாக்குகள் கிடைத்து நிறைவேற்றப்பட்டது. ஆனால், முன்னாள் அதிபர் ராஜபக்சே கட்சியின் எம்.பி.க்கள் 49 பேர் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை அதிபராக மைத்திரிபால சிறிசேனா பதவி ஏற்றபின் போரில் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து தவிக்கும் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. ஐநா மனித உரிமைகள் அமைப்பும் தலையிட்டு விரைவாக மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் குடியேற்றம் செய்யவும், அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் அழுத்தம் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக இறுதிக்கட்டப் போரில் காணாமல் போன 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கண்டுபிடிக்கும் விதமாக அலுவலகத்தைக் கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு திறந்தது.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன் கூறுகையில், ”உறுதி செய்யப்பட்ட உண்மை, நீதி பரிபாலனம், நம்பகத்தன்மை, இழப்பீடு, ஆகியவை நீதி வழங்குவதில் அடிப்படை கூறுகளாகும். இறுதிக்கட்டப் போரில் உடைமைகளையும், உறவுகளையும் இழந்து தற்போது பொருளாதார வசதி இல்லாமல் இருக்கும் மக்களுக்குத் தேவையான பொருளாதார இழப்பீட்டைக் கண்டிப்பாக வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.