ஊடகவியலாளரா எமக்கு தெரியாது சவுதி அரேபியா கைவிரிப்பு..

சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தை உண்டு இல்லை என்று புரட்டி எடுக்கும் ஜமால் காஸ்கோக்கிஸ் என்ற வேஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் எங்கேயென்று எமக்கு தெரியாதென சவுதியின் உள்துறை அமைச்சர் இளவரசர் அப்டீல் அஸீஸ் பின் செயட் பின் நயாப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மட்டும் அவர் நின்றுவிடவில்லை சவுதி சர்வதேச இராஜதந்திர விதிமுறைகளை மீறாமல் நடக்கிறது என்றும் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சவுதியில் பிறந்தவர் என்றாலும் அமெரிக்காவில் சென்ற ஆண்டே குடியேறிவிட்டார், சவுதி மன்னர் குடும்பத்தால் தனக்கு ஆபத்து என்பது அவருக்கு தெரியும்.

அத்துடன் அவர் நின்றுவிடவில்லை சவுதியில் இருக்கும் தனது மனைவிகூட வேண்டாம் என்று கருதினார். இதனால் அவரை விவாகரத்து செய்து துருக்கியில் உள்ள பெண்மணி ஒருவரை மணமுடிக்க விரும்பினார்.

இதற்கான தகவலை வழங்க துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதியின் கொன்ஸ்சலேற் தர தூதரலாயத்திற்கு விண்ணப்பித்தார். இவருக்கான நேரடி விசாரணைக்கு அழைப்பும் வந்தது.

கதைப்படி பார்த்தால் தூதராலயம் கொலைக்களம் என்பதை அவர் அறியவில்லை..

துருக்கிக் காதலியுடன் கடந்த 2ம் திகதி கொன்சலேற் தூதராலயத்திற்குள் நுழைந்தவர் நுழைந்தவர்தான் இன்று 13ம் திகதியாகிவிட்டது இன்னமும் வெளியே வரவில்லை.

உள்ளே என்ன நடந்தது யாருக்கும் தெரியாது. ஆனால் உள்ளே நடக்கப்போவது பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல துருக்கிக்கு தெரிந்துள்ளது.

அதற்கான சம்பவங்கள் வெளியில் நடந்துள்ளன..

சவுதியில் இருந்து 15 பேர் கொண்ட இராணுவ உளவுப்பிரிவினர் அதே தினம் அவசரமாக துருக்கியில் வந்திறங்கியுள்ளனர்.

துருக்கி கண்காணிப்பு கமேராவை பொருத்தி ஊடகவியலாளர் உள்ளே போனதை உறுதி செய்தது. பின்னர் உள்ளேயிருந்து வந்த அவலக்குரல்களையும் பதிவு செய்து அமெரிக்காவிற்கு அனுப்பியது.

தொடர்ந்து காய்கள் உருள ஆரம்பித்தன..

வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ஜமால் உள்ளே அடித்து கொல்லப்பட்டுவிட்டதாக எழுதியது. துருக்கி சவுதியிடம் இது பற்றி உடன் விபரம் கேட்டது. அதற்குள் சவுதி உள்ளேயிருந்த கண்காணிப்பு கமேரா உட்பட அனைத்து தடயங்களையும் மாற்றிவிட்டது.

பத்திரிகையாளர் காணாமல் போக, தூதரலாயத்தில் இருந்து காரியத்தை முடித்த 15 பேரும் மறுபடியும் சவுதி தலைநகர் றியாட் புறப்பட்டனர். இவர்களுடன் கூடவே ஆறு கார்கள் விமான நிலையம் போயுள்ளன. அதில் ஒன்றில் இறந்த ஊடகவியலாளர் உடலம் அல்லது உயிருடனான கடத்தல் இடம் பெற்றதாக துருக்கி கூறியது.

இதற்கு மேலும் அமெரிக்காவால் முழுப்பூசினியை சோற்றில் புதைக்க முடியவில்லை. விவகாரத்தை மண் போட்டு மூடாமல் அடியில் இருந்து ஆராய வேண்டுமென்று கேட்டது. கூடவே விபரம் அறிய தனது நாட்டு சவுதிக்கான தூதுவரையும் அவசரமாக அழைத்துள்ளது.

இதற்குள் ஊடகவியலாளரை தேட ஒரு குழுவை துருக்கி நியமித்துள்ளது. சவுதிக்கும் அமெரிக்காவுக்கும் முறுகல் வரும் நேரம் இதுவென புரிந்து கொண்டு மெல்ல அமெரிக்காவின் நண்பனாகவும் பல்டியடித்துள்ளது.

காரணம் என்ன..?

இதுவரை அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே பகை நிலவியது. அமெரிக்க பாதிரியாரான அன்ட்று புறூன்சன் என்பவரை 2016ல் இருந்து துருக்கி தடுப்புக்காவலில் வைத்திருந்தது. இவரை பயங்கரவாதி என்று கூறி துருக்கி நீதிமன்று மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனையும் விதித்திருந்தது.

எல்லாம் பொய் அவரை விடும்படி அமெரிக்கா கேட்டும் துருக்கி இணங்கவில்லை. இதனால் துருக்கி மீது அமெரிக்க அதிபரின் பொருளாதார தடைகள் விழுந்ன. துருக்கிய நாணயம் 40 வீத வீழ்ச்சி கண்டதும் கடந்த ஆறுமாதகால வரலாறாகும்.

இந்த நிலையில் இன்று துருக்கிய நீதிமன்று பாதிரியாரை விடுதலை செய்து தண்டனை காலத்தையும் ரத்து செய்து, அமெரிக்கா போக அனுமதியும் வழங்கிவிட்டது. இதனால் துருக்கி அமெரிக்க மோதல் தணிவு நிலைக்கு வர வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் துருக்கியும் சவுதியும் முறுக்கிக் கொண்டு நிற்கின்றன..

சவுதி யாருக்கும் பயப்படாமல் துணிவுடன் பேச இதற்கு முன்னரே பல உதாரண சம்பவங்கள் நடந்துள்ளது அவர்களுக்கு தெரியும். அளவுக்கு மிஞ்சிப் போனால் ஒரு கப்பலில் ஆயுதத்தை இறக்கினால் எதிர்க்கும் நாடு படுத்துவிடும் என்பதும் தெரியும்.

இதற்கு மேலும் பல உதாரணங்கள் உள்ளன..

01. துருக்கியின் எதிரியான குர்டிஸ்தானிய பீ.கே.கே அமைப்பு தலைவர் ஒச்சாலானை அமெரிக்க உளவுப்பிரிவு எங்கோ கைது செய்து துருக்கியிடம் ஒப்படைத்ததே அது மட்டும் சர்வதேச இராஜதந்திர செயலா..?

02. அமெரிக்க சி.ஐ.ஏயின் உளவு விமானங்கள் பல ஐரோப்பிய நாடுகளில் இறங்கி பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்து இரவோடு இரவாக சித்திரவதைக் கூடங்களுக்கு கொண்டு சென்றதாக கூறப்பட்டதே. இதற்கு உலக நாடுகள் பல துணை போயுள்ளனவே.. இவர்களால் எம்மை மட்டும் குற்றம் சொல்ல எப்படி முடியும்..?

எனவே ஒரு நாட்டின் ஆள்புல எல்லை.. அந்த நாட்டில் பிடிக்கும் ஒருவரை நாடுகடத்தும் அனுமதி போன்ற எதையுமே அமெரிக்கா பின்பற்றவில்லையே என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

இப்படியெல்லாம் இருக்க..

சவுதி தனது பார்வையில் பயங்கரமான ஒருவரை பிடித்து கொல்வது, கடத்திச் செல்வது மட்டும் எவ்வகையில் அநீதியாகும் என்பது சவுதியின் கேள்வியாக இருக்க வாய்ப்புள்ளது.

அது இது.. ஆறு, குளம் எதுவும் வேண்டாம்..

முதலில் உங்களில் சர்வதேச இராஜதந்திர நியமங்களை மீறாத யாராவது இருந்தால் முன்னால் வாருங்கள் என்று சவுதி கேட்டால் முன்னால் நிற்க இன்று எந்த வல்லரசுக்கு திராணி இருக்கிறது..?

இவை சவுதியின் கோபத்தில் கலந்துள்ளன.

எல்லாம் இருக்கட்டும் நிருபர் காணாமல் போனது..

சரி சவுதிக்கும் தெரியாது.. துருக்கிக்கும் தெரியாது.. என்றால் அந்த நபரை..

எருமைப்பல்லனா..
எறிமாடனா..
ஊத்தை குடியனா..
எந்தப் பேய் விழுங்கியது..?
இதுதான் வண் மில்லியன் பரிசு கேள்வி…

கேள்விக்கு விடை இல்லை.

தொடர்கிறது இராஜதந்திர சிக்கல்.

அலைகள் 13.10.2018

Related posts